×

சபரிமலையில் மண்டலகால பூஜைகள் தொடங்கின: பக்தர்கள் குவிந்தனர்


திருவனந்தபுரம்: சபரிமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்களின் சரண கோஷத்துடன் கார்த்திகை 1ம் தேதியான இன்று முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கின. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் கோயில் நடை திறந்தார். அதன் பிறகு புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடந்தது. சபரிமலை மேல்சாந்தியாக மகேஷும், மாளிகைப்புரம் கோயில் மேல்சாந்தியாக முரளியும் பொறுப்பேற்று கொண்டனர். தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் 2 பேருக்கும் காதில் ஐயப்பனின் வேத மந்திரங்கள் ஓதி புனித நீர் தெளித்தார். நேற்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை.

இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டது. நேற்று கனமழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர். கார்த்திகை மாதம் 1ம் தேதியான இன்று அதிகாலை 3 மணிக்கு சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் முன்னிலையில் புதிய மேல்சாந்தி மகேஷ் சபரிமலை கோயில் நடை திறந்தார். தொடர்ந்து மாளிகைப்புரம் கோயில் நடையை மேல்சாந்தி முரளி திறந்தார். கார்த்திகை மாதம் முதல் நாளான இன்று ஐயப்பனை தரிசிக்க சபரிமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். அதிகாலையில் கணபதி ஹோமத்திற்கு பிறகு 3.30 மணியளவில் இந்த மண்டகாலத்தின் முதல் நெய்யபிஷேகம் தொடங்கியது.

தினமும் காலையில் 3.30 முதல் 7 மணி வரையும், பின்னர் 8 மணி முதல் 11.30 மணி வரையும் நெய்யபிஷேகம் நடைபெறும். காலை 7.30 மணிக்கு உஷபூஜையும், நண்பகல் 12 மணிக்கு 25 கலச பூஜைக்கும் பின்னர் 1 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டது. மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு தீபாராதனை, புஷ்பாபிஷேகம் உள்பட பூஜைகள் நடைபெறும். இரவு 10.50 மணிக்கு ஹரிவராசனம் பாடி 11 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். பம்பை மற்றும் சன்னிதானத்தில் 2 எஸ்பிக்கள் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

The post சபரிமலையில் மண்டலகால பூஜைகள் தொடங்கின: பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,Thiruvananthapuram ,
× RELATED வைகாசி மாத பூஜை சபரிமலை கோயில் நடை திறப்பு: பக்தர்கள் குவிந்தனர்