×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 21 அதிகாரிகள் மீது நடவடிக்கை: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக 21 அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை தொடங்கியிருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ம் ஆண்டு நடந்த போராட்டத்தின் போது பொதுமக்கள் மீது காவல்துறையினர் மே 22ம் தேதி துப்பாக்கிசூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

ஆணையத்தின் புலன் விசாரணை பிரிவு அளித்த அறிக்கை மற்றும் தமிழக அரசு அளித்த அறிக்கை அடிப்படையில் இந்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்துவைத்தது. இதனை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, துப்பாக்கிச்சூடு தொடர்பாக விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் வழக்கு இன்று நீதிபதிகள் நிஷா பானு மற்றும் மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையை அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அதன் அடிப்படையில், அப்போதைய மாவட்ட ஆட்சியர் , 17 காவல் அதிகாரிகள், 3 வருவாய் துறை அதிகாரிகள் என 21 பேருக்கு எதிராக நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதாவது, ஆட்சியராக இருந்த வி.வெங்கடேஷ், தென்மண்டல ஐ.ஜி.யாக இருந்த ஷைலேஷ் குமார் யாதவ் உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், எஸ்.பி. கபில் குமார் சரத்கர், துணை வட்டாட்சியராக இருந்த சேகர் உள்ளிட்டோர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை தொடங்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். அச்சமயம் குறுக்கிட்ட நீதிபதிகள், துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கின் நிலை என்ன? ஒரு காவல் அதிகாரி மீது மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதே, மற்ற போலீசாருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டதா? என்று அடுக்கடுக்கான கேள்வியை எழுப்பினர்.

இது சம்பந்தமாக சிபிஐ தரப்பு வழக்கறிஞர் மற்றும் தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆகியோர் அடுத்த விசாரணையின் போது ஆஜராகி சொல்வதாக தலைமை வழக்கறிஞர் குறிப்பிட்டார். தொடர்ந்து, குற்றச்சாட்டுக்குள்ளான அதிகாரிகள் இன்னும் பணியில் நீடிக்கிறார்களா? அல்லது ஓய்வு பெற்றுவிட்டார்களா? என்பது தெரியவில்லை என்று குறிப்பிட்ட நீதிபதிகள், அரசு தரப்பில் தாக்கல் செய்த அறிக்கையில் இடம் பெற்றிருந்த காவல்துறை அதிகாரி சைலேஷ் குமார் யாதவ் ஏற்கனவே உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் பிரச்சனை ஏற்பட்டபோது திறமையாக கையாண்டு நீதிமன்றம் சுமூகமாக செயல்பட செய்தவர் என்று தெரிவித்து அவர் எப்படி இந்த குற்றச்சாட்டுக்கு ஆளானார்கள்? என்று கேள்வி எழுப்பினார்கள்.

தற்போது நடவடிக்கை உள்ளாகியுள்ள 21 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் என்ன? துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அவர்களின் பங்கு என்ன? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கின் விசாரணை டிசம்பர் 11ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

The post தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 21 அதிகாரிகள் மீது நடவடிக்கை: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Thoothukudi gunfire incident ,Government of Tamil Nadu ,Chennai High Court ,Chennai ,Thoothukudi shooting incident ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...