×

சாமியே சரணம் ஐயப்பா.. கார்த்திகை மாதம் பிறந்ததை முன்னிட்டு மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்!!

சென்னை : கார்த்திகை மாதம் பிறந்ததை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் மண்டல பூஜை, மகரவிளக்கு தரிசனத்துக்காக கார்த்திகை மாதம் 1ம் தேதி மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி தலையில் சுமந்து சென்று ஐயப்பனை தரிசனம் செய்வது வழக்கம்.

அதன்படி இந்தாண்டுக்கான சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. கார்த்திகை மாதம் இன்று தொடங்கியுள்ள நிலையில், நேற்று மாலை 5 மணிக்கு சபரிமலையில் நடை திறக்கப்பட்டது. 41 நாட்கள் நாள்தோறும் பூஜைகள் நடத்தப்பட்டு, டிசம்பர் 27ம் தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது. பிறகு நடை மூடப்பட்டு மீண்டும் டிசம்பர் 30ம் தேதி நடை திறக்கப்பட்டு ஜனவரி 15ம் தேதி வரை மகரவிளக்கு பூஜைகள் நடைபெறுகிறது. அன்று மாலை 6.30 மணிக்கு புகழ்பெற்ற மகர ஜோதி தரிசனம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இன்று கார்த்திகை மாதம் பிறப்பையொட்டி சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் இஷ்ட தெய்வங்களை வணங்கி அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று குருசாமி, கோவில் குருக்கள் முன்னிலையில் பயபக்தியுடன் சரண கோஷம் முழங்க மாலைகளை அணிந்து கொண்டனர். மதுரை, திருச்சி, கோவை, நெல்லை உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் ஐயப்ப பக்தர்கள் அதிகாலையிலேயே மாலை அணிவித்து தங்கள் விரதத்தை தொடங்கி உள்ளனர். தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அருவியில் புனித நீராடி பக்தர்கள் சரண கோஷம் முழங்க மாலை அணிந்துக் கொண்டனர்.

The post சாமியே சரணம் ஐயப்பா.. கார்த்திகை மாதம் பிறந்ததை முன்னிட்டு மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்!! appeared first on Dinakaran.

Tags : Samiye Saranam Ayyappa ,Ayyappa ,Karthighai ,Chennai ,Sabarimala Ayyappan ,Kerala ,
× RELATED காதல் உறவுகளை சொல்லும் உப்பு புளி காரம்