×

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு : அனைத்து வாக்காளர்களும் ஜனநாயகத் திருவிழாவின் அழகை மேம்படுத்துவர் என மோடி நம்பிக்கை

போபால்: மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் காலை 7 மணி முதலே நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். மிசோரம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் மற்றும் தெலங்கானா மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதி சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் முதலில் மிசோரமில் ஒரே கட்டமாகவும், சட்டீஸ்கரில் 20 தொகுதிகளுக்கு முதல் கட்டமாகவும் வாக்குப்பதிவு கடந்த 7ம் தேதி நடந்து முடிந்தது. இதைத் தொடர்ந்து 230 தொகுதிகளை கொண்ட மத்தியபிரதேசத்தில் ஒரே கட்டமாகவும், சட்டீஸ்கரில் மீதமுள்ள 70 தொகுதிகளில் 2வது மற்றும் கடைசி கட்டமாகவும் இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

இதையொட்டி இரு மாநிலங்களிலும் நடந்த தேர்தல் பிரசாரம் நேற்று முன் தினம் மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. மபியில் ஆளும் பாஜவை எதிர்த்து, காங்கிரஸ், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன. ஆனாலும் பாஜ, காங்கிரஸ் இடையே முக்கிய போட்டி நிலவுகிறது. தேர்தலுக்காக 2,049 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2,533 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மொத்தம் 5 கோடியே 60 லட்சத்து 60 ஆயிரத்து 925 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இதில் 2 கோடியே 88 லட்சத்து 25 ஆயிரத்து 607 பேர் ஆண்கள், 2 கோடியே 72 லட்சத்து 33 ஆயிரத்து 945 பேர் பெண்கள், 1,373 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடையும். சட்டீஸ்கரிலும் தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் ஓய்ந்தது. 22 மாவட்டங்களில் உள்ள 70 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இதில் 61 தொகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நக்சல் பாதிப்புள்ள 9 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரையிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இங்கு 2ம் கட்ட தேர்தலில் 958 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 18,833 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கும் ஆளும் காங்கிரஸ், பாஜ இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

இதனிடையே பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவில், மத்திய பிரதேச மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள வாக்காளர்கள், ஆர்வத்துடன் வாக்களித்து இந்த மாபெரும் ஜனநாயகத் திருவிழாவின் அழகை மேம்படுத்துவார்கள் என நம்புகிறேன். முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு எனது சிறப்பு வணக்கம்,”எனத் தெரிவித்துள்ளார்.

The post மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு : அனைத்து வாக்காளர்களும் ஜனநாயகத் திருவிழாவின் அழகை மேம்படுத்துவர் என மோடி நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : Chhattisgarh, Madhya Pradesh ,Modi ,Bhopal ,Madhya Pradesh ,Chhattisgarh ,
× RELATED நாடாளுமன்றக் கூட்டத்தொடரை சுமூகமாக...