×

புதுவை பஸ் நிலையம் அருகே உளுந்தூர்பேட்டை வாலிபரிடம் செல்போன் பறித்த ஆசாமி கைது

புதுச்சேரி, நவ. 17: புதுவை பஸ் நிலையம் அருகே உளுந்தூர்பேட்டை வாலிபரிடம் செல்போன் பறித்த ஆசாமியை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை, குணமங்கலம், குளக்கரை வீதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் மணிராஜ் (27). கட்டிட தொழிலாளியான இவர் சென்னைக்கு வேலைக்கு சென்றுவிட்டு தீபாவளி விடுப்பையொட்டி சொந்தஊர் திரும்பியுள்ளார். பின்னர் அங்கிருந்து சென்னை செல்லும் வழியில் நேற்று முன்தினம் புதுச்சேரி பஸ்நிலையம் வந்திறங்கிய மணிராஜ், அய்யனார் கோயில் வீதியிலுள்ள ஒயின்ஷாப் அருகே நின்றிருந்தாராம்.

அப்போது அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத ஆசாமி, திடீரென மணிராஜ் கையில் இருந்த ரூ.12 ஆயிரம் மதிப்பிலான செல்போனை வழிப்பறி செய்து கொண்டு ஓடினார். இதையடுத்து மணிராஜ் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அந்த வாலிபரை ஓடஓட விரட்டி பிடித்தனர். பின்னர் அவருக்கு தர்மஅடி கொடுத்த பொதுமக்கள் உடனே உருளையன்பேட்டை போலீசில் செல்போன் பறிப்பு ஆசாமியை ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் பாபுஜி, எஸ்ஐ சந்திரசேகரன் தலைமையிலான போலீசார், அந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில் அவர், விழுப்புரம் வடகோடிபாளையத்தைச் சேர்ந்த தொழிலாளி அருள்குமார் (33) என்பதும், செலவுக்கு பணமில்லாததால் செல்போனை பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து அருள் குமார் மீது வழக்குபதிந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post புதுவை பஸ் நிலையம் அருகே உளுந்தூர்பேட்டை வாலிபரிடம் செல்போன் பறித்த ஆசாமி கைது appeared first on Dinakaran.

Tags : Ulundurpet ,Puduvai bus station ,Puducherry ,Dinakaran ,
× RELATED செங்குறிச்சி கிராமத்தில் புதியதாக...