×

கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ₹2.50 கோடி மதிப்பில் பேருந்து நிலைய கட்டிடம்; மதுராந்தகத்தில் அதிகாரிகள் ஆய்வு

மதுராந்தகம், நவ. 17: கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் மூலம், ₹2.50 கோடி மதிப்பில் மதுராந்தகம் பேருந்து நிலைய கட்டிடம் கட்டப்பட உள்ளதால், பேருந்து நிலையத்தில் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அண்ணா பேருந்து நிலையம் 1987ம் ஆண்டு ₹32 லட்சம் மதிப்பில் அடிக்கல் நாட்டப்பட்டு 48 கடைகளுடன் 1992ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த பேருந்து நிலைய கட்டிடம் 10 ஆண்டுகளுக்கு மேலாக பராமரிக்கப்படாமல் இருந்ததால் பேருந்து நிலைய கட்டிடத்தின் மேல் தள பகுதியில் மரம், செடி – கொடிகள் முளைத்து விரிசல் ஏற்பட்டது. மேலும், பேருந்து நிலையம் உள்புறம் சிமென்ட் பூச்சுகள் உடைந்து விழ தொடங்கியது. இதனால், பல பயணிகள் காயமடைந்தனர். மேலும், மழைக்காலங்களில் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் மழை நீர் கசிவு ஏற்பட்டு கடைகளில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மழை நீரில் நனைந்து வீணாகி வந்தது.

இதனால், பழுதடைந்த பேருந்து நிலைய கட்டிடம் அகற்றிவிட்டு, புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். அதன் அடிப்படையில், கடந்த ஒரு ஆண்டாக சென்னையில் இருந்து உயர் அதிகாரிகளும் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து அதிகாரிகளும் தொடர்ந்து ஆய்வு செய்தனர். அப்போது, பேருந்து நிலையத்தின் மேல் பகுதி சேதம் அடைந்து உள்ளதாகவும் புதிய கட்டிடம் கட்டுவதற்கு பரிந்துரையும் செய்தனர். இதன் அடிப்படையில், கலைஞர் நகர் புற மேம்பாடு திட்டத்தின் மூலம் ₹2.50 கோடி மதிப்பில் 48 கடைகளுடன் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு நகர மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பேருந்து நிலைய கட்டிடத்தில் கடைகள் நடத்தி வரும் வணிகர்களை காலி செய்யுமாறு 3 முறை நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியது.

இதனால், வணிகர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. இருப்பினும் பழுதடைந்துள்ள பேருந்து நிலைய கட்டிடத்தில் கடைகள் செயல்பட அனுமதி கிடையாது என வணிகர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். ஒருசில கடை உரிமையாளர்கள் இடிக்க சம்மதம் தெரிவித்தனர் சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர். இதனையடுத்து, கட்டிடத்தை இடிக்க மதுராந்தகம் நகராட்சி ஆணையர் சுதர்சன், ஆய்வாளர் சீனிவாசன், மேலாளர் ஏழுமலை, பொறியாளர் நித்தியா, பணி மேற்பார்வையாளர் சீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று காலை ஆய்வு மேற்கொண்டு வணிகர்களை காலி செய்யும்படி அறிவுறுத்தினர்.
இந்நிலையில், நாளை முதல் பேருந்து நிலையம் கட்டிடத்திற்கு மின் இணைப்பு துண்டிப்பு செய்து கட்டிடம் இடிப்பதற்கு பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 மதுராந்தகம் பேருந்து நிலையத்தில் பல ஆண்டுகளாக கடை நடத்தி வரும் கடைகளின் உரிமையாளர்களுக்கு புதிய பேருந்து நிலைய கட்டிடம் கட்டி முடித்தவுடன் கடைகள் வழங்க வேண்டும். கடைகளில் தற்போதைய காலத்திற்கு ஏற்றார்போல் பொருட்கள், பழ வகைகளை வைப்பதற்கான பல்வேறு வசதிகளுடன் கூடியதாக கடைகளை கட்டித்தர வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 பேருந்து நிலைய கட்டிடம் இடிக்கப்படுவதால், பேருந்து நிலையத்தின் வெளியே ஜிஎஸ்டி சாலையில் பேருந்துகள் நின்று பயணிகளை ஏற்றிச்செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அப்போது, போக்குரவரத்து நெரிசல் ஏற்பாடமல் பார்த்துக்கொள்ளுதல், பொதுமக்களுக்கு சிரமம் இல்லாமல் பயணிக்கு வகையில் ஏற்பாடு செய்தல் குறித்தும் போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 அண்ணா பேருந்து நிலைய கட்டிடத்தில் 28 கடைகள் மட்டுமே கட்டப்படும் என அறிவிப்பு வெளியான நிலையில் கடைகள் நடத்தி வரும் வணிகர்கள் மாவட்ட கலெக்டரை சந்தித்து முன்பு உள்ளதைப் போன்றே 48 கடைகள் கட்டி வணிகர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அப்போது, அவர்களிடம் கலெக்டர் இது குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கடைக்காரர்கள் தெரிவித்தனர்.

The post கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ₹2.50 கோடி மதிப்பில் பேருந்து நிலைய கட்டிடம்; மதுராந்தகத்தில் அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Madhurandakam ,Madhuranthak ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் குற்ற...