×

சோழவந்தான் அருகே அடர்ந்த புதர்களுடன் காணப்படும் மயானம்: அடிப்படை வசதிகள் அமைக்கப்படுமா…

 

சோழவந்தான், நவ. 17: சோழவந்தான் அருகே அருந்ததியர் சமூக மயானத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் ஊராட்சிக்குட்பட்டது நடுவூர் காலனி. இங்கு அருந்ததியர் சமூக மக்கள் சுமார் 80 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊரின் அருகே தனி மயானம் உள்ளது. இங்கு தகன மேடை, குளியல் தொட்டி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. மேலும் மயானத்தில் புதர் மண்டி கிடப்பதால் இறந்தவர்களை அடக்கம் செய்ய சிரமப்படுகின்றனர்.

மேலும், இதன் அருகிலேயே கல்புளிச்சான்பட்டி கிராமத்திற்குரிய பொது மயானம் உள்ளது. இங்கு தகன மேடை இருப்பினும், அது பழுதடைந்த நிலையில் உள்ளது. இங்கும் குளியல் தொட்டி இல்லை. இவ்விரு மயானங்களிலும் உரிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து நடுவூர் காலனியைச் சேர்ந்த கணேசன் என்பவர் கூறுகையில் ‘‘அருந்ததியர் சமூகத்திற்குரிய மயானம் அடிப்படை வசதிகளின்றி புதர் மண்டி கிடக்கிறது. எரிக்க தகன மேடை இல்லாததால் மழை காலத்தில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறோம். இறந்த உடலை புதைக்கவும், எரிக்கவும் நாங்கள் படும் துயரங்கள் எளிதாக கூறிவிட முடியாது. எனவே எங்கள் மயானத்தில் தகன மேடை, குளியல் தொட்டி, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்’’ என்றார்.

The post சோழவந்தான் அருகே அடர்ந்த புதர்களுடன் காணப்படும் மயானம்: அடிப்படை வசதிகள் அமைக்கப்படுமா… appeared first on Dinakaran.

Tags : Cholavanthan ,Cholavandan ,Arunthathiyar ,Dinakaran ,
× RELATED வாலிபர் தூக்கிட்டு தற்கொலை