×

அதிமுகவில் 3 கொடிகளில் எந்த கொடிக்கு தடை? ஒபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் காரசார வாதம்: தடையை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை: அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதித்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தொடர்பட்ட வழக்கின் விசாரணையின்போது அதிமுகவுக்கு 3 கொடிகள் உள்ள நிலையில் தனி நீதிபதி எந்த கொடியை பயன்படுத்த தடை விதித்துள்ளார் என்று ஓ.பி.எஸ் தரப்பில் காரசாரமாக வாதிடப்பட்டது. அதிமுகவின் பெயர், சின்னம். கொடி, லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடைக்கால தடை விதித்து கடந்த 7ம் தேதி தனி நீதிபதி என்.சதீஷ்குமார் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் பி.எச்.அரவிந்த்பாண்டியன், அப்துல் சலீம் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் வாதிடும்போது, இடைக்கால தடை விதிப்பதற்கு முன்பு ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்துக்களை தனி நீதிபதி கேட்கவில்லை. ஏற்கனவே இரு நீதிபதிகள் அமர்வின் உத்தரவின்படி அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது என்று ஓ.பன்னீர்செல்வத்திற்கு தனி நீதிபதி உத்தரவிட்டிருப்பது உயர் நீதிமன்ற அமர்வு மற்றும் உச்ச நீதிமன்ற மேல் முறையீடு வழக்குகளின் இறுதி தீர்ப்பை போல் உள்ளது.

கட்சியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டாலும், லட்டக்கணக்கான தொண்டர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அவர்கள் இன்னும் அதிமுக உறுப்பினர்களாகவே உள்ளனர். எனவே, இந்த உத்தரவு அவரது ஆதரவாளர்களான கட்சி தொண்டர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும். உயர் நீதிமன்ற உத்தரவில், கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கியது, ஒற்றை தலைமையை மீண்டும் கொண்டு வந்தது உள்ளிட்ட தீர்மானங்கள் தொடர்பான பிரச்னைகளை விரிவான விசாரணை நடத்தி விசாரணை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த தீர்மானங்கள் அனைத்தும் உறுதி செய்யப்பட்டதாக கூறுவதை ஏற்க முடியாது. அதுமட்டுமல்ல, கொடி, சின்னம் உள்ளிட்டவை அ.தி.மு.க.வின் சொத்து. அதை அ.தி.மு.க., சார்பில் தான் வழக்கு தொடர முடியுமே தவிர எடப்பாடி பழனிசாமி தனிநபராக வழக்கு தொடர்ந்து தடை பெற முடியாது. வழக்கில் முகாந்திரம் உள்ளதாக ஏற்கனவே கூறியுள்ள உயர் நீதிமன்றத்தின் கருத்தை அடிப்படையாக கொண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பையும் கேட்டு முடிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் தெளிவுபடுத்தியுள்ளது. இதை தனி நீதிபதி கவனிக்க தவறிவிட்டார். இதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம் என்று வாதிட்டார்.

மூத்த வழக்கறிஞர் அப்துல் சலீம் வாதிடும்போது, அதிமுகவில் அண்ணா ஒற்றை விரலை காட்டுவது போன்ற கொடியும், அந்த கொடியில் இரட்டை இலை சின்னம் அச்சிடப்பட்ட கொடியும், தொழிற்சங்க கொடியும் பயன்படுத்தப்படுகின்றன. இதில் எந்த கொடியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரியவில்லை. கட்சி கொடியை கையில் பச்சை குத்தியவர்களின் நிலை என்ன ஆகும்?. அந்த பச்சையை எப்படி நீக்க முடியும் என்றார். அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள், ‘கவலைப்படாதீர்கள். உங்கள் கையை இழக்கமாட்டீர்கள்’’ என்று சிரித்தப்படி கருத்து தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய்நாராயண் வாதிடும்போது, தனி நீதிபதி தடை விதிப்பதற்கு முன்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதில் அளிக்க 3 முறை அவகாசம் வழங்கினார். தொடர்ந்து அவகாசம் கேட்டதால்தான் தடை விதித்தார். இந்த தடை விதித்து 10 நாட்கள் ஆகி விட்டது. இதுவரை தனி நீதிபதி முன்பு ஓ.பன்னீரசெல்வம் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. தடையை நீக்க கோரியும் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் அவர் பொறுப்புடன் செயல்படவில்லை. கட்சியின் அடிப்படை உறுப்பினர்களாக ஓ.பன்னீர்செல்வத்தின் லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் உள்ளதாக கூறுவது பொய்யான வாதமாகும்.

சாலையில் செல்லும் எவரும் அதிமுகவின் சின்னத்தை பயன்படுத்துவதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் கட்சியை விட்டு நீக்கப்பட்டவர், தான் ஒருங்கிணைப்பாளர் என்று கூறிக் கொண்டு கட்சி பெயரை பயன்படுத்தி நிர்வாகிகளை நியமிப்பது போன்ற செயல்களை செய்யும்போது தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய குழப்பம் ஏற்படும். அ.தி.மு.க.,வில் பல ஆண்டுகள் இருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு அ.தி.மு.க.,வின் கொடி எது? என்று நன்றாக தெரியும் என்றார்.

இதையடுத்து, நீதிபதிகள், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு நிர்வாகிகளை நீக்கவும், நியமிக்கவும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிகாரம் உள்ளதா? கொடி உள்ளிட்டவைகளை பயன்படுத்த முடியுமா? என்று கேட்டனர். அதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மூத்த வழக்கறிஞர்கள், நிர்வாகிகள் நீக்கத்தை எதிர்த்து அவர்கள் வழக்கு தொடரவில்லையே? இப்போதுக்கூட, இரு தரப்பினரும் உருவாக்கிய கட்சி விதியை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டு இணையதளத்தில் வெளியிட்டுள்ளது என்று பதில் அளித்தனர்.அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

The post அதிமுகவில் 3 கொடிகளில் எந்த கொடிக்கு தடை? ஒபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் காரசார வாதம்: தடையை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,OBS ,CHENNAI ,O. Panneerselvam ,OPS ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...