×

கல்வி தகுதி இல்லாமல் பணியில் சேர்ந்ததாக அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 உதவி பேராசிரியர்கள் டிஸ்மிஸ்

சிதம்பரம்: போதுமான கல்வி தகுதி இல்லாமல் பணியில் சேர்ந்ததாக அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 உதவி பேராசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் பழம்பெரும் பல்கலைக்கழகம் ஆகும். இந்த பல்கலைக்கழகத்தில் நிதிச் சிக்கல் ஏற்பட்டதாக கூறி கடந்த 2012ம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் போராட்டம் வெடித்தது. சில மாதங்கள் நடைபெற்ற இந்த போராட்டத்தின் முடிவில் கடந்த 2013ம் ஆண்டு பல்கலைக்கழக நிர்வாக அதிகாரியாக தற்போதைய தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ்மீனா நியமிக்கப்பட்டார்.

அவர் பல்கலைக்கழகத்தில் சுமார் ஓராண்டுக்கு மேலாக பணியாற்றி பல்வேறு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டார். இந்த காலகட்டத்தில்தான் அண்ணாமலை பல்கலைக்கழக சட்டம் 2013 இயற்றப்பட்டு, பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தை தமிழ்நாடு அரசு நேரடியாக ஏற்றது. அப்போது 2011ம் ஆண்டு மற்றும் 2010ம் ஆண்டுக்கு முன்பு வரை பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர்களாக புதிதாக பணியில் சேர்ந்தவர்களில் 56 பேர் போதிய கல்வித் தகுதி இல்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து பல்கலைக்கழகம் விசாரணை நடத்தியது. அதில், உதவி பேராசிரியராக பணியில் சேரும்போது உதவி பேராசிரியருக்கான போதுமான கல்வித் தகுதி இல்லாமல் பணியில் சேர்ந்ததாகவும் 56 பேர் கண்டறியப்பட்டனர்.

அவர்களை பல்கலைக்கழக நிர்வாகம் அதிரடியாக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இவர்கள் பல்கலைக்கழகத்தில் மேலாண்மை துறை, வேளாண்மை துறை, கணினி அறிவியல் உள்ளிட்ட துறைகளில் உதவி பேராசிரியர்களாக பணியில் இருந்தனர். இவர்கள் மீது ஆட்சி மன்ற குழு முடிவின்படியும், தமிழ்நாடு அரசின் உயர்கல்வி துறையின் அறிவுறுத்தலின்படியும் இந்த 56 பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

பல்கலைக்கழகத்தில் தற்போது பணியாற்றி வரும் 18 பேருக்கு உத்தரவுகளை அந்தந்த துறை தலைவர்கள் மூலம் வழங்க சொல்லி விட்டதாகவும், பணி நிரலில் அயற்பணியாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு கல்லூரிகளில் பணியாற்றி வரும் 38 உதவி பேராசிரியர்களுக்கு கல்லூரி கல்வி இயக்குனர் மூலம் அவர்கள் பணிபுரியும் அந்தந்த கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பி விட்டதாகவும் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் சிங்காரவேல் தெரிவித்தார். பல்கலைக்கழகத்தில் போதிய கல்வி தகுதி இல்லாமல் பணியில் சேர்ந்த 56 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டு இருப்பதால் சிதம்பரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

The post கல்வி தகுதி இல்லாமல் பணியில் சேர்ந்ததாக அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 உதவி பேராசிரியர்கள் டிஸ்மிஸ் appeared first on Dinakaran.

Tags : Annamalai University ,Chidambaram ,Dinakaran ,
× RELATED பரம்பரை சொத்துவரிக்கு எதிரான...