×

ரூ.12 கோடி மதிப்புள்ள ஆம்பர் கிரீஷ் பறிமுதல்

நாகர்கோவில்: நாகர்கோவில் வடசேரி திருவனந்தபுரம் சாலையில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு தீவிரமாக கண்காணித்தனர். அப்போது அவ்வழியாக வந்த டெல்லி பதிவெண் கொண்ட காரை சோதனையிட்டபோது, ஒரு பேக்கில் வாசனை திரவியங்கள் தயாரிக்கவும், சில மருந்துகள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படும் ஆம்பர் கிரீஷ் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, காரில் இருந்த 4 பேரை பூதப்பாண்டி வனச்சரக அலுவலகத்தில் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். அங்கு வனத்துறை அவர்களிடம் விசாரித்தனர்.

அதில், பிடிபட்டவர்கள், நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் செங்குளம் வடக்கு தெருவை சேர்ந்த நாராயணன்(41), மேலப்பாளையம் மேலக்கருங்குளம் பாத்திமாநகரை சேர்ந்த அருணாச்சலம்(53), நாங்குநேரி தேரடி தெருவை சேர்ந்த சுந்தர்(25), மேலப்பாளையம் நடராஜபுரத்தை சேர்ந்த வேலாயுதம் (41) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் 4 பேரையும் வனத்துறையினர் கைது செய்து நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பிடிபட்ட ஆம்பர் கிரீஷின் சர்வதேச மதிப்பு ரூ.10 கோடி முதல் ரூ.12.50 கோடி வரை இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

The post ரூ.12 கோடி மதிப்புள்ள ஆம்பர் கிரீஷ் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Amber Girish ,Nagercoil ,Vadaseri Thiruvananthapuram road ,
× RELATED சாலைகள் உயர்த்தப்பட்டுள்ளதால்...