×

10ம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ் 2 பொது தேர்வுகள் மார்ச்சில் தொடக்கம்: மே மாதம் முடிவுகள் வெளியீடு

சென்னை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளுக்கான அட்டவணைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று வெளியிட்டார். மார்ச் மாதம் பொதுத் தேர்வுகள் நடக்கின்றன. செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி மாதம் நடக்கிறது. தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியிடப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலும் மாநில பாடத்திட்டத்தின் கீழ் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று வெளியிட்டார். பின்னர், அவர் கூறியதாவது:

பொதுத் தேர்வுகள் தொடங்குவதற்கு முன்னதாக செய்முறைத் தேர்வுகள் 2024 பிப்ரவரி மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 10ம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 23ம் தேதி முதல் 29ம் தேதி வரையும், பிளஸ் 1க்கான செய்முறை தேர்வுகள் 19ம் தேதி முதல் 24ம் தேதி வரையும், பிளஸ்-2க்கான செய்முறை தேர்வுகள் 12ம் தேதி தொடங்கி 17ம் தேதி வரையும் நடக்கும். தொடர்ந்து, மார்ச் 1ம் தேதி முதல் 22ம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வும், மார்ச் 4ம் தேதி முதல் 25ம் தேதி வரை பிளஸ் 1 தேர்வும், மார்ச் 26ம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை 10ம் வகுப்பு தேர்வுகளும் நடக்கும்.

கடந்த ஆண்டை போலவே விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, மே 6ம் தேதி பிளஸ் 2, 14ம் தேதி பிளஸ் 1, 10ம் தேதி 10ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இந்த வயதில் மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கவனமுடன் படித்து நல்ல மதிப்பெண் பெற வேண்டும். தேர்வு முறையில் எந்த மாற்றமும் இல்லை. மாணவர்களுக்கு குழப்பம் ஏற்படக்கூடாது என்ற வகையில் தேர்வு முறையில் மாற்றம் செய்யாமல் கடந்த ஆண்டைப்போலவே நடத்தப்படும். கேள்வித்தாளில் பிழைகள் இருப்பதாக சிலர் வழக்கு தொடுத்து அதற்கான மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று கேட்கின்ற நிலை கடந்த சில ஆண்டுகளில் இருந்தது.

அதுபோல இப்போது ஏற்படாமல் இருக்க அதிக கவனமுடன் கேள்வித்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் கவனமாக விடைத்தாள் திருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தவறு செய்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடக்கும். அனைத்து தேர்வுகளிலும் கேள்வித்தாள் படித்துப் பார்க்கவும், விடைத்தாள் முகப்பில் விவரங்கள் குறிக்கவும் 15 நிமிடங்கள் ஒதுக்கப்படும்.

The post 10ம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ் 2 பொது தேர்வுகள் மார்ச்சில் தொடக்கம்: மே மாதம் முடிவுகள் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister of School ,Anbil Mahesh Poiyamozhi ,
× RELATED எச்.வி.எப் விஜயந்தா மாடல் பள்ளியில்...