×

காசாவில் உடனடி மனிதாபிமான உதவி: ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றம்

ஐநா: இஸ்ரேல் -ஹமாஸ் போர் நீடிக்கும் நிலையில் காசாவில் உடனடி மனிதாபிமான உதவிக்கு ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் படையினர் கடந்த அக்டோபர் 7ம் தேதி எல்லை தாண்டி இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதல் ஒரு மாதத்தை கடந்து நீடித்து வருகிறது. வான்வழி தாக்குதலை நடத்தி வந்த இஸ்ரேல் தற்போது தரைவழி தாக்குதலையும் நடத்தி வருகிறது. இதனிடையே காசாவுக்கு நிவாரண உதவிகள் தடையின் கொண்டு செல்லவும், இஸ்ரேல் ஹமாஸ் இடையே மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தம் கோரி ஜோர்டன் அரசு சார்பில் அக்டோபர் 27ம் தேதி ஐநாவில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இந்த தீர்மானம் மீது 193 உறுப்பினர்களை கொண்ட ஐநா சபையில் நடந்த வாக்கெடுப்பில் தீர்மானம் வெற்றி அடைந்தது. இந்நிலையில் காசாவில் உடனடியாக நிவாரண உதவிகள் தடையின்றி சென்று சேரவும் ஹமாஸ் படையினர் நிபந்தனையின்றி பணயக் கைதிகளை விடுவிக்கவும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 15 உறுப்பினர்களை கொண்ட ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் 12 உறுப்பினர் நாடுகள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து நாடுகள் இந்த தீர்மானத்தை புறக்கணித்துள்ளன.

* காசா மருத்துவமனையில் இஸ்ரேல் ராணுவம் 2வது நாளாக சோதனை
காசா மருத்துவமனையில் இஸ்ரேல் ராணுவம் 2 வது நாளாக நடத்திய சோதனையில்,ஹமாஸ் அமைப்பின் கட்டளை மையமோ அல்லது சுரங்கம் ஆகியவை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் சில ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஷிபா மருத்துவமனை ஹமாசின் கட்டளை மையமாக செயல்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டை ஷிபா மருத்துவமனை மறுத்துள்ளது.

* இஸ்ரேல் தூதரக தடுப்பு மீது கார் மோதல்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே உள்ள தற்காலிக தடுப்பு மீது கார் மோதியதில் போலீஸ்கார் காயமடைந்தார். இதில் காரை ஓட்டி வந்த 53 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர். வலது சாரி ஆதரவாளரான அவர் என்ன காரணத்துக்காக காரில் வேகமாக வந்து மோதினார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post காசாவில் உடனடி மனிதாபிமான உதவி: ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Tags : UN ,UN Security Council ,Gaza ,Israel ,Hamas ,Dinakaran ,
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்...