×

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் ஏலம் விட வேண்டிய 6 நிறுவனங்களின் சொத்து பட்டியல் தாக்கல்: பெங்களூரு தனி நீதிமன்றத்தில் தமிழ்நாடு லஞ்ச-ஒழிப்பு போலீசார் வழங்கினர்

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விட வேண்டிய 6 பினாமி நிறுவனத்தின் சொத்துக்களின் பட்டியலை தற்போதைய சந்தை மதிப்பின் அடிப்படையில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் தாக்கல் செய்தனர். சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை விரைவில் ஏலம் விடுவதற்கான நடவடிக்கையில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எச்.ஏ.மோகன் ஈடுபட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதி மோகன், ஏலம் விட வேண்டிய சொத்துக்களின் பட்டியலை தற்போதைய சந்தை மதிப்பீடு கொண்டு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இவ்வழக்கு நேற்று நீதிபதி எச்.ஏ.மோகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சார்பில் ஆஜரான துணைக் கண்காணிப்பாளர் புகழ்வேந்தன், சொத்து குவிப்பு வழக்கில் இடம் பெற்றிருந்த 6 பினாமி நிறுவனங்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் பட்டியலை தற்பொழுது உள்ள சந்தை மதிப்பின் படி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இதில் ரிவர் வே அக்ரோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 1200 ஏக்கர் நிலத்தில் 300 ஏக்கர் நிலம் மட்டும் இருவர் பெயரில் பட்டா செய்யப்பட்டுள்ளதால் அதை கையகப்படுத்த சிறிது கால அவகாசம் வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மீதமுள்ள அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்யும் பணியில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு வருவதாகவும் நீதிபதியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

மறுபுறம் சென்னை அண்ணா சாலையில் உள்ள கனரா வங்கி கிளையில் 1995ம் ஆண்டு ஜெயலலிதா அவரது பெயரில் தலா ரூ.25 லட்சம் மதிப்பில் வைக்கப்பட்டிருந்த இரண்டு வைப்பு நிதி கணக்குகளின் தற்போதைய மதிப்பை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய கடந்து முறை நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்த நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்த போது கனரா வங்கியின் சார்பில் சட்ட ஆலோசகர் ஸ்ரேயா, நீதிமன்றத்தில் ஆஜராகி மேற்கொண்ட இரண்டு வைப்பு நிதி கணக்குகளை யாரும் உரிமை கோராத காரணத்தினால் பல வருடங்களுக்கு முன்பே இரண்டு கணக்குகளையும் முடக்கம் செய்து விட்டதாக தெரிவித்தார். உடனடியாக அந்த கணக்குகளை மீட்டெடுத்து தற்பொழுது வரை வட்டியுடன் சேர்த்து பெங்களூரு நீதிமன்ற பதிவாளர் பெயரில் மாற்றி கொடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதை அடுத்து வழக்கின் விசாரணை டிசம்பர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

* 6 பினாமி நிறுவனங்கள்
1. லெக்ஸ் ப்ராப்பர்டி டெவலப்மெண்ட் பிரைவேட் லிமிடெட்,
2. சிக்னோரா எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட்,
3. மெடோ அக்ரோ பார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட்
4. ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் பிரைவேட் லிமிடேட்
5. ரிவர் வே அக்ரோ பிரைவேட் லிமிடெட்
6. இந்தோ டோதா கெமிக்கல்.

The post ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் ஏலம் விட வேண்டிய 6 நிறுவனங்களின் சொத்து பட்டியல் தாக்கல்: பெங்களூரு தனி நீதிமன்றத்தில் தமிழ்நாடு லஞ்ச-ஒழிப்பு போலீசார் வழங்கினர் appeared first on Dinakaran.

Tags : Jayalalithaa ,Tamil Nadu Bribe-Employment Police ,Bengaluru ,Tamil Nadu bribe ,Dinakaran ,
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...