×

சதிகளை மீறி சாதிக்கும் ஷமி

உலகக கோப்பை தொடரில் தொடர்ந்து 3வது முறையாக அரையிறுதியில் இந்தியா விளையாடி உள்ளது. கூடவே 2011ம் ஆண்டுக்கு பிறகு இறுதி ஆட்டத்துக்கும் முன்னேறி இருக்கிறது. இந்த மகிழ்ச்சிகளுக்கு இடையே அந்த ஒரே நாள் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் ஏராளமான சாதனைகளை செய்து அசத்தியுள்ளனர். சச்சினின் பல்வேறு சாதனைகளை முறியடித்து விராத் கோஹ்லி இப்போது ‘பாரத் ரத்னா’ விருதை நெருங்கியுள்ளார். கூடவே கேப்டன் ரோகித் சர்மா சாதனைகள் தனி. அத்துடன் வேகம் முகமது ஷமி ஒரே ஆட்டத்தில் 7 விக்கெட் அள்ளிய இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

கூடவே உலக கோப்பை தொடர்களில் குறைந்த பந்துகளை வீசி, குறைவான இன்னிங்சில் 50விக்கெட் அள்ளிய முதல் வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி ஒரே உலக கோப்பை தொடரில் 3 ஆட்டங்களில் 5 விக்கெட்களுக்கு மேல் வீழ்த்தியவர், எல்லா தொடர்களிலும் 4முறை 5 விக்கெட்களுக்கு மேல் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். இப்படி நியூசிக்கு எதிரான அரையிறுதியில் கோஹ்லி, ரோகித் ஆகியோருக்கு இணையாக என்பதை விட கூடுதலாக ஷமி சாதனை படைத்துள்ளார், வெற்றிக்கு காரணமாக இருந்துள்ளார்.

இத்தனை திறமை இருந்தும் ஷமிக்கான ஆட்டக் கதவுகள் எப்போதும் திறந்திருப்பதில்லை. அஷ்வினைப் போன்று எப்போது வெளியில் உட்கார வைப்பார்கள் என்பதை சொல்ல முடியாத நிலையில் இருக்கிறார். இந்த உலக கோப்பையில் இந்தியா இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி உள்ளது. அவற்றில் முதல் 4 ஆட்டங்களில் ஷமிக்கு வாய்ப்பு தரவில்லை. கபில், கம்பீர், ஹர்பஜன் என முன்னாள் வீரர்களின் விமர்சனத்துக்கு பிறகு நியூசிலாந்துக்கு எதிரான 5 வது ஆட்டத்தில்தான் ஷமி களமிறக்கப்பட்டார். அதில் 5 விக்கெட்களை அள்ளி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இத்துடன் நேற்று முன்தினம் நடந்த நியூசிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் 7 விக்கெட்களை வாரி ஆட்ட நாயகனாகி உள்ளார். இந்த தொடரில் 6ஆட்டங்களில் மட்டும் விளையாடி 23விக்கெட்களை அறுவடை செய்து முதல் இடத்தையும் பிடித்தார். இப்படி ஷமி வெளியில் உட்கார வைப்பது இது முதல் முறை கிடையாது. அதிலும் தொடர்ந்து 3 உலக கோப்பைகளில் ஷமி உட்கார வைக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இங்கிலாந்தில் 2019ம் ஆண்டு நடந்த உலக கோப்பையில் இந்தியா அரையிறுதி உட்பட 9 ஆட்டங்களில் விளையாடியது.

ஆனால் ஷமிக்கு 4 ஆட்டங்களில் மட்டுமே வாய்ப்பு தரப்பட்டது. அந்த 4 ஆட்டங்களில் மட்டும் விளையாடி 14விக்கெட்களை அள்ளிக் குவித்தார். அப்படியும் நியூசிக்கு எதிரான அரையிறுதியில் ஷமிக்கு வாய்ப்பு தரப்படவில்லை. அதற்கு பதிலடியாக இந்த முறை அரையிறுதியில் நியூசிக்கு மட்டுமல்ல தன்னை ஓரம்கட்டி வைத்தவர்களுக்கும் பதிலடி கொடுத்துள்ளார். இப்படி 2015 உலக கோப்பைத் தொடரிலும் எல்லா ஆட்டங்களிலும் ஷமிக்கு வாய்ப்பு தரவில்லை. இப்படி விரட்டும் சதிகளை மீறி ஷமி சாதித்து வருகிறார்.

* வெறுப்பு விமர்சனம்
அமீரகத்தில் 2021ல் நடந்த 2021 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர்களால் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியவில்லை. அந்த ஆட்டத்தில் பாக் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. ஆனால் ஷமி மட்டும் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார். அவரை ‘பாகிஸ்தானுக்கு ேபா’ என்றும் பலரும் விமர்சனம் செய்த அருவெறுப்பான சம்பவமும் நடந்தது.

* வாய்ப்புகளுக்காக காத்திருந்தேன்
ஆட்ட நாயகன் விருது பெற்ற பிறகு பேசிய ஷமி, ‘ என் வாய்ப்புக்காக காத்திருந்தேன். வெள்ளைப்பந்து கிரிக்கெட்டை நான் அதிகம் விளையாடவில்லை. புதிய பந்தில் விக்கெட்களை வீழ்த்த முயற்சித்தேன். கேன் வில்லியம்சன் அடித்த பந்தை கேட்ச் பிடிக்க முடியாமல் தவற விட்டதுக்காக வருத்தப்பட்டேன். நான் ்வேகத்தை கூட்டினேன். அவர்களும் அதை அடித்து விளையாடினர். எனக்கு வாய்ப்பு உருவானது. நடுகளம் நன்றாக இருந்தது. புல் நன்றாக வெட்டப்பட்டு இருந்தது. ஆனாலும் பனி பெய்யுமோ என்ற பயம் இருந்தது. ரன்கள் சீராக அதிகரித்தன. ஒருவேளை பனி பெய்து இருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும். எப்படியோ 2015, 2019 அரையிறுதிகளில் தோற்றாலும் இப்போது பதிலடி தந்துள்ளோம். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி இருக்கிறேன். இனி நம் எல்லோருக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை’ என கூறியுள்ளார்.

ஷமியும், வாய்ப்புகளும்
வரிசை உலக
கோப்பை இந்தியா
ஆட்டங்கள் ஷமி
ஆட்டங்கள் ஷமி
விக்கெட்கள் ஷமி
தரவரிசை
1 2015 8 7 17 5
2 2019 9 4 14 14
3 2023* 10 6 23 1
(அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் முதல் 15 இடங்களில் உள்ள தரவரிசை மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன)

ஷமி 100
* உத்ரபிரதேசத்தில் பிறந்து வளர்ந்தவர் ஷமி(33). ஆனால் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் மேற்கு வங்க மாநில அணிக்காகதான் விளையாடி உள்ளார். டெல்லியில் 2013ம் ஆண்டு நடந்த இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஒருநாள் ஆட்டத்தில் அறிமுகமானார். அதில் 4மெய்டன் உட்பட 9ஓவர்கள் வீசி 23 ரன்களை விட்டுத் தந்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.
* நியூசிக்கு எதிரான அரையிறுதி ஆட்டம் ஷமிக்கு 100வது ஒருநாள் ஆட்டம். பல வீரர்களின் 100வது ஆட்டத்தை நினைவில் வைத்திருக்கும் கிரிக்கெட் உலகம் ஷமியின் 100வது ஒருநாள் ஆட்டத்தை மறந்து விட்டது.
* ஷமி இதுவரை 100ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி அதில் 194 விக்கெட் அள்ளி உள்ளார். வாய்ப்பு கிடைத்தால் 200வது விக்கெட்டை வீழ்த்துவார். கூடவே குறைந்த இன்னிங்சில்(80), 150 விக்கெட்களை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 3வது இடத்தில் ஷமி இருக்கிறார். பைனலில் 6 விக்கெட்களை அள்ளினால் குறைந்த இன்னிங்சில் 200விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடிப்பார்.

The post சதிகளை மீறி சாதிக்கும் ஷமி appeared first on Dinakaran.

Tags : Shami ,India ,World Cup ,Dinakaran ,
× RELATED டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்...