×

32 தமிழக மீனவர்கள் விடுவிப்பு: டிகோ கார்சியாவில் இருந்து ஓரிரு நாளில் சொந்த ஊர் திரும்புவர்

நாகர்கோவில்: டிகோகார்சியாவில் சிறைபிடிக்கப்பட்ட 32 தமிழக மீனவர்களும், அவர்களின் ஒரு விசைப்படகும் விடுவிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டம் சின்னத்துறை கிராமத்தை சேர்ந்த சுனில் வாழ்த்தூஸ், ஜெரால்டு பென்சிகர், அனீஸ் வாழ்த்தூஸ், பிஜூ வாழ்த்தூஸ், சைமன், வல்சலன், உட்பட 28 மீனவர்கள், நாகப்பட்டினத்தை சேர்ந்த சஞ்சுகண்ணு முத்துகுமரன், கார்த்திக் கந்தசாமி, திருவனந்தபுரம் மாவட்டம் புதியதுறையை சேர்ந்த செபாஸ்டின் ஸ்டூவர்ட் மற்றும் அசாம் மாநிலத்தை சார்ந்த சந்தன் சோனோவால் என 32 பேர் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தேங்காப்பட்டணம் துறைமுகத்திலிருந்து செப்டம்பர் 15ம் தேதி மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு புறப்பட்டு சென்றனர்.

செப்டம்பர் 27ம் தேதி இவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடல் எல்லை தாண்டியதாக பிரிட்டிஷ் கடற்படை அதிகாரிகள் இவர்களையும், 2 படகுகளையும் சிறைபிடித்தனர். படகிலிருந்த மீன்பிடி உபகரணங்களையும், இவர்கள் பிடித்து வைத்திருந்த பல லட்சம் மதிப்பிலான மீன்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் இவர்களை அக்டோபர் 3ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த 32 மீனவர்களையும் 2 படகுகளையும் எவ்வித அபராதமுமின்றி விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிருந்தார். இந்தநிலையில் 32 மீனவர்களும் ஒரு படகும் விடுவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஓரிரு நாட்களில் சொந்த ஊர் வருவார்கள் என்று கூறப்படுகிறது.

The post 32 தமிழக மீனவர்கள் விடுவிப்பு: டிகோ கார்சியாவில் இருந்து ஓரிரு நாளில் சொந்த ஊர் திரும்புவர் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Tico Garcia ,Nagercoil ,Nadu ,Chinnathura village ,Kumari district ,Dico Garcia ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...