×

குளிர்காலத்தை முன்னிட்டு கேதார்நாத் கோயில் நடை அடைப்பு

டேராடூன்: இந்தியாவின் 12 ஜோதிலிங்க சிவ தலங்களில் கேதார்நாத் கோயில் ஒன்றாகும். இது உத்தராகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டம் கேதார்நாத்தில் மந்தாகினி ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள கார்வால் சிவாலிக் மலைத் தொடரில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயில் நடை நேற்று சாத்தப்பட்டது. குளிர்காலத்தில் கேதார்நாத் கோயில் முழுவதும் பனியால் சூழப்பட்டுவிடும் என்பதால் 6 மாதங்களுக்கு நடை சாத்தப்படுவது வழக்கம். கேதார்நாத் கோயில் பகுதியில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு நிலவி வரும் சூழலில் கோயிலின் கதவுகள் நேற்று காலை சாத்தப்பட்டன.

இந்நிகழ்வின்போது கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 2,300க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, சிவபெருமானை வழிபட்டதாக பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் கமிட்டி தலைவர் அஜேந்திர அஜய் தெரிவித்துள்ளார். கோயிலின் நடைசாத்தப்பட்ட பிறகு கேதார்தாத் சிவனின் பஞ்சமுக விக்கிரகம் பல்லக்கில் எடுத்து செல்லப்பட்டது. உகிமடம் பகுதியில் உள்ள ஓம்காரேஸ்வர் கோயிலுக்கு கொண்டு செல்லப்படும் இந்த விக்கிரகம், குளிர்காலம் முழுவதும் அங்கு வழிபடப்படும். கேதார்நாத் கோயிலில் நடப்பாண்டில் 19.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டதாக அஜேந்திர அஜய் தெரிவித்தார்.

The post குளிர்காலத்தை முன்னிட்டு கேதார்நாத் கோயில் நடை அடைப்பு appeared first on Dinakaran.

Tags : Kedarnath temple ,Dehradun ,India ,Uttarakhand State ,Ruthraprayak District ,Kedarnath ,
× RELATED கனவு ஆசிரியர்களாக தேர்வு...