×

உத்தரகாண்ட் சுரங்க விபத்து.. 5 நாட்களாகியும் தொழிலாளர்களை மீட்கும் பணியில் தாமதம்: நார்வே, தாய்லாந்து நிறுவனங்களிடம் ஆலோசனை கேட்பு

தெஹ்ராதூண்: உத்தரகாண்ட் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலை சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி மேலும் தாமதமாகும் என தகவல் வெளியாகியுள்ளது. உத்தரகாண்டில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக உத்தரகாசி, யமுனோத்ரியை இணைக்கும் வகையில் சில்க்யாரா வளைவு-பர்காட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12ம் தேதி அதிகாலை 4 மணியளவில் 60 மீட்டர் தொலைவு சுரங்கப்பாதையில் மண் சரிந்தது. இருபுறமும் மணல் மூடிய நிலையில் சுரங்கப்பாதைக்குள் 40 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர்.

பல்வேறு துறைகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட நிபுணர்கள் இரவு-பகலாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சரிந்து விழுந்த பாறைகளை சிறிதளவு அகற்றி குழாய் மூலம் தொழிலாளர்களுக்கு ஆக்சிஜன், திரவ உணவு தரப்படுகிறது. ஏற்கனவே சரிந்து விழுந்த பாறைகளை அகற்ற கொண்டு வரப்பட்ட துளையிடும் இயந்திரம் உடைந்ததால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. தற்போது சரிந்த பாறைகளை அகற்றும் பணியில் அமெரிக்க இயந்திரம் ஒன்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. மணிக்கு 4-லிருந்து 5 மீட்டர் நீளம் வரை ஊடுருவக் கூடியது அமெரிக்க இயந்திரம் என மீட்புப் படையினர் கூறுகின்றனர்.

இந்நிலையில் தொழிலாளர்களை மீட்கும் பணி மேலும் தாமதமாகும் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 5 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் மீட்புப் பணி மேலும் 3 நாட்கள் தாமதமாகலாம் என்று மீட்புக் குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர். தாய்லாந்தில் குகையில் சிக்கிய 12 சிறுவர்களை மீட்ட நிறுவனத்தை தொடர்பு கொண்டு உதவி கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் வி.கே.சிங் தகவல் தெரிவித்துள்ளார். நார்வே நாட்டைச் சேர்ந்த புவி தொழில்நுட்ப நிறுவனத்திடமும் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

The post உத்தரகாண்ட் சுரங்க விபத்து.. 5 நாட்களாகியும் தொழிலாளர்களை மீட்கும் பணியில் தாமதம்: நார்வே, தாய்லாந்து நிறுவனங்களிடம் ஆலோசனை கேட்பு appeared first on Dinakaran.

Tags : Uttarakhand ,Norway ,Thailand ,TEHRADUN ,Norway, Thailand ,Dinakaran ,
× RELATED பிரபல கல்வி நிறுவனங்களின் நுழைவுத்...