×

ரூ.10 கோடி மதிப்பு ஆம்பர் கிரீஷ் பறிமுதல்: 4 பேர் கும்பல் கைது

நாகர்கோவில்: நாகர்கோவிலில் ரூ.10 கோடி மதிப்புள்ள ஆம்பர் கிரீஷ் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை விற்பனைக்கு கொண்டு வந்த 4 பேர் கும்பலை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஓராண்டாக ஆம்பர் கிரீஷ் எனப்படும் திமிங்கல உமிழ் நீர் விற்பனைக்காக கடத்தி கொண்டு வரப்படும் சம்பவங்களும், அதனை விற்க முயன்றவர்கள் கைது செய்யப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது.

இந்தநிலையில், வடசேரி தனிப்படை போலீசாருக்கு, நெல்லை மாவட்டத்தில் இருந்து, விற்பனைக்காக திமிங்கல உமிழ்நீர் (ஆம்பர் கிரிஸ்) நாகர்கோவிலுக்கு கொண்டு வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உஷாரான போலீசார் உமிழ்நீர் விற்பனை கும்பலை கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி வடசேரி பகுதியில் தனிப்படை போலீசார் நேற்று இரவு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை சோதனையிட்டனர். இந்த சோதனையின்போது, ஒரு பேக்கில் ஆம்பர் கிரீஷ் இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து அவர்களை பூதப்பாண்டி வனச்சரக அலுவலகத்தில் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். அவர்கள் 4 பேரிடமும் வனத்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் நெல்லையை சேர்ந்த நாராயணன் (41), அருணாச்சலம் (53), சுந்தர் (25), வேலாயுதம் (41) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் 4 பேரையும் வனத்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பிடிபட்ட ஆம்பர் கிரீஷின் மதிப்பு ரூ.10 கோடி முதல் 12.50 கோடி வரை இருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

The post ரூ.10 கோடி மதிப்பு ஆம்பர் கிரீஷ் பறிமுதல்: 4 பேர் கும்பல் கைது appeared first on Dinakaran.

Tags : Amber Girish ,Nagercoil ,Amber ,Dinakaran ,
× RELATED இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து...