×

கார்த்திகை தீபத்திருவிழா நாளை துவக்கம் தி.மலை அண்ணாமலையார் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு இன்று ஆய்வு செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அடிமுடி காணாத ஜோதிப் பிழம்பாக இறைவன் எழுந்தருளியதை கொண்டாடும் வகையில், கார்த்திகை மாதம் கிருத்திகை தினத்தன்று 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்படுகிறது.

அதன்படி, இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நாளை அதிகாலை 4.45 மணி முதல் 6.12 மணிக்குள் அண்ணாமலையார் கோயில் 3ம் பிரகாரத்தில் சுவாமி சன்னதி எதிரில் உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெறும். அப்போது, அலங்கார ரூபத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் எழுந்தருளி காட்சியளிப்பார்கள். அதைத்தொடர்ந்து, பஞ்சமூர்த்திகள் கண்ணாடி விமானங்களில் மாடவீதியில் பவனியும், இரவில் நந்தி வாகனத்தில் சுவாமி பவனியும் நடைபெறும். விழாவின் தொடர்ச்சியாக, சந்திரசேகரர் மற்றும் பஞ்சமூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் ஒவ்வொரு நாளும் பவனி வருகின்றனர். 23ம் தேதி மகா தேரோட்டம் நடைபெறும். அன்று காலை தொடங்கி இரவு வரை பஞ்சரதங்கள் (5 தேர்கள்) மாடவீதியில் அடுத்தடுத்து பவனி வர உள்ளது.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக வரும் 26ம்தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் ஏகன் அநேகன் எனும் தத்துவத்தை உலகுக்கு உணர்த்துவதற்காக, பரணி தீபம் ஏற்றப்படும். அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். தீபம் ஏற்ற 3,500 கிலோ நெய், ஆயிரம் மீட்டர் திரி பயன்படுத்தப்படுகிறது. மகா தீபத்தை தரிசிக்க சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி, விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வெள்ளோட்டம்
அண்ணாமலையார் கோயில் மாட வீதியில் முதற்கட்டமாக பே கோபுர வீதி மற்றும் பெரிய தெரு பகுதியில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை தார் சாலையாக இருந்த மாடவீதியில், கான்கிரீட் சிமென்ட் சாலை அமைக்கப்பட்ட பிறகு இந்த ஆண்டு தீபத்திருவிழா தேரோட்டம் நடைபெற உள்ளது. எனவே, கான்கிரீட் சாலையில் தேரோட்டம் நடைபெறுவதை முன்னோட்டம் பார்க்க கோயில் நிர்வாகம் திட்டமிட்டது. அதன்படி இன்று காலை சுப்பிரமணியர் ேதர் வெள்ளோட்டம் நடைபெற்றது. தேரடி வீதியில் தொடங்கிய தேரோட்டம் நான்கு மாட வீதி வழியாக சென்று மீண்டும் நிலையை அடைந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

ஆய்வு
இந்நிலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் அண்ணாமலையார் கோயிலில் தீப விழாவையொட்டி செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை இன்று காலை பார்வையிட்டனர். அப்போது கோயிலில் உள்ள அனைத்து பிரகாரங்கள் மற்றும் மாட வீதிகளில் சென்று ஆய்வு செய்தனர். அன்னதான கூடத்தை ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு, பக்தர்களிடம் அன்னதானம் சுவையாக உள்ளதா என கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது கலெக்டர் முருகேஷ், எஸ்பி கார்த்திகேயன், அறநிலையத்துறை செயலாளர் மணிவாசன், கோயில் இணை ஆணையர் ஜோதி உள்பட பலர் உடனிருந்தனர். இதைதொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் தீபவிழா முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து அதிகாரிகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். இதில் தீபத்திருவிழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பாகவும், பக்தர்களுக்கு அனைத்து வசதிகளை ஏற்படுத்தி தருவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

The post கார்த்திகை தீபத்திருவிழா நாளை துவக்கம் தி.மலை அண்ணாமலையார் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Karthigai Deeptharivizha ,Minister ,Sekharbhabu ,Mount Annamalaiyar Temple ,Tiruvannamalai ,Ministers ,Velu ,Sekarpapu ,Thiruvannamalai ,Karthigai Deepthrishi Festival ,
× RELATED மதத்தை தவிர பேசுவதற்கு பாஜகவினரிடம்...