×

மழை பாதிப்பு குறித்து 401 புகார்கள் மட்டுமே வந்தன சென்னை மாநகராட்சி பராமரிக்கும் 35,111 சாலைகளில் மழைநீர் தேங்கவில்லை:  107 புகார்களுக்கு உடனடி தீர்வு  ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை, நவ. 16: மழை பாதிப்பு குறித்து 401 புகார்கள் மட்டுமே வந்தன. சென்னை மாநகராட்சி பராமரிக்கும் 35,111 சாலைகளில் மழைநீர் தேக்கம் இல்லை என்று ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார்.
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வடகிழக்குப் பருவமழை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்வேறு ஆய்வுக்கூட்டங்கள் நடத்தி, அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அமைச்சரும், இதுகுறித்து களஆய்வுகள் மேற்கொண்டு, நடந்து வரும் மழைநீர் வடிகால் பணிகளையும், இதர துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும் விரைவாக மேற்கொள்ள அறிவுறுத்தியதன் அடிப்படையில் பணிகள் விரைவாக முடிக்கப்பட்டுள்ளது. மேயரும், துணை மேயரும் புதிதாக மேம்படுத்தப்பட்ட சென்னை மாநகர பேரிடர் மேலாண்மை திட்டத்தினை வெளியிட்டு, இதுகுறித்து பல்வேறு ஆய்வுக் கூட்டங்களையும் நடத்தியுள்ளனர். வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நேற்று முதல் பரவலாக குறிப்பாக கோடம்பாக்கம், அடையாறு, திரு.வி.க. நகர் போன்ற பகுதிகளில் கனமழை பெய்தது.

சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாகவும், பேரிடர் மேலாண்மை குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள காரணத்தாலும் பெரும்பாலான மழைநீர் தேங்கும் இடங்களில் தற்பொழுது மழைநீர் தேக்கம் காணப்படவில்லை. தொடர்ந்து பெய்யும் மழையை எதிர்கொள்ளும் வகையில் சென்னை மாநகராட்சி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளது. பொதுமக்களிடமிருந்து வரும் மழை நீர்த் தேக்கம், மழையினால் பாதிக்கப்பட்ட சாலைகள் உள்ளிட்ட புகார்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுவரை பெரிய அளவிலான புகார்கள் பெறப்படவில்லை. தனிப்பட்ட வீடுகளின் முன்பு நீர்த்தேக்கம் தொடர்பாக 276 புகார்களும், தெருவிளக்குகள் தொடர்பாக 97 புகார்கள், மரம் மற்றும் கிளைகள் விழுதல் தொடர்பாக 16 புகார்கள், கழிவுநீர் வெளியேறுதல் தொடர்பாக 5 புகார்கள், மின்சாரம் இல்லாதது தொடர்பாக 4 புகார்கள் உள்பட என மொத்தம் 401 புகார்கள் பெறப்பட்டு, 107 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்று சேதமடைந்த சாலைகளை சரிசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகப்படியாக பெருங்குடி மண்டலத்தில் 56 புகார்கள், கோடம்பாக்கத்தில் 50 புகார்கள், அண்ணாநகர் மண்டலத்தில் 49 புகார்கள், ராயபுரம் மண்டலத்தில் 42 புகார்கள் உள்ளிட்ட 401 புகார்கள் பெறப்பட்டுள்ளது. கழிவுநீர் வெளியேறுவது தொடர்பான புகார்களுக்கு கழிவுநீர் வாரியத்துடன் இணைந்து செயல்படவும், மின் பெட்டி தொடர்பான புகார்களுக்கு மின்சார வாரியத்துடன் இணைந்து செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

426 சதுர மீட்டர் பரப்பளவிலான சென்னை மாநகராட்சியில் 388 கி.மீ. நீளத்திற்கு 471 பேருந்து தட சாலைகள், 5,270 கி.மீ. நீளத்திற்கு 34,640 உட்புறச் சாலைகள் என மொத்தம் 5,658 கி.மீ. நீளத்தில் 35,111 சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதிகளில் மழைநீர்த்தேக்கம் இல்லை. கடந்த ஆண்டு மழைநீர்த்தேங்கிய 85 இடங்களில் இந்த முறை மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய மழையில் மழைநீர் தேங்கும் இடங்கள், மழைநீர் தேக்கத்திற்கான காரணங்கள் ஆகியவற்றை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த ஆய்வின் போது, கூடுதல் ஆணையர் ஆர்.லலிதா, துணை ஆணையர் ஷரண்யா அறி ஆகியோர் உடனிருந்தனர்.

சாலை வெட்டுக்களால் விரிவாக்கப் பகுதிகளில் தண்ணீர் தேக்கம்
விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அத்தியாவசியப் பணிகளான குடிநீர் மற்றும் கழிவுநீர், மழைநீர் வடிகால் அமைத்தல், மின்சார வாரியத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் போன்ற பல்வேறு பணிகளில் மேற்கொள்ளப்பட்ட சாலை வெட்டுக்களின் காரணமாக தண்ணீர் தேங்கியிருந்தது. இந்த பகுதிகளில் தண்ணீர் தேங்கிய இடங்கள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கும் மனைகள் கண்டறியப்பட்டு மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். டிராக்டர்களுடன் கூடிய 150 மோட்டார் பம்புகள் பணியாளர்களுடன் கூடுதலாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் இடங்களுக்கு பயன்படுத்தப்படும் என்று ராதாகிருஷ்ணன் கூறினார்.

நோய்த்தொற்று பாதிப்பு தடுக்க நடவடிக்கை
வடகிழக்கு பருவமழையால் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படாத வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், 16 சமூகநல மையங்கள், 3 மகப்பேறு மருத்துவமனைகள், ஒரு தொற்றுநோய் மருத்துவமனை, 140 சுகாதார நல மையங்கள் பொதுமக்களுக்கு மருத்துவ சேவைகள் வழங்கிடும் வகையில் செயல்பட்டு வருகிறது. மழைநீர் தேங்கும் இடங்களில் வாரம் ஒரு முறை மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவதோடு, நாளொன்றுக்கு 45 சிறப்பு மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பணிகளோடு பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், சாலைகள் மற்றும் தெருக்களில் சுற்றித்திரிந்த 12 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசியப் பணிகளுக்காக சில இடங்களில் சாலை வெட்டுப் பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்ட பணிகள் ஜனவரி மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தாலும், மழை இல்லாத நாட்களில் அந்தப் பணிகளும் மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

The post மழை பாதிப்பு குறித்து 401 புகார்கள் மட்டுமே வந்தன சென்னை மாநகராட்சி பராமரிக்கும் 35,111 சாலைகளில் மழைநீர் தேங்கவில்லை:  107 புகார்களுக்கு உடனடி தீர்வு  ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chennai Corporation ,Commissioner ,Radhakrishnan ,Chennai ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் 188 இடங்களில் தண்ணீர்...