×

மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் நடத்திய ஆய்வில் மழையால் பாதிக்கப்படும் இடங்களாக 133 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது : மழைநீர் தேங்கினால் அகற்ற உடனடி நடவடிக்கை என பேச்சு

பூந்தமல்லி, நவ. 16: மழையால் பாதிக்கப்படும் இடங்களாக 133 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது மழை நீர் தேங்கினால் அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நடத்திய ஆய்வின்போது கூறினார். வடகிழக்கு பருவமழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், பூந்தமல்லி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மழை நீர் தேங்காதவாறு நகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. இதற்கிடையே பூந்தமல்லி நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் கடந்த காலங்களில் ஏற்கனவே மழைநீரால் அதிக பாதிப்புக்கு உண்டான இடங்களில் தற்போது மழைநீர் தேங்காதவாறு எடுக்கப்பட்டு உள்ள நடவடிக்கைகள் குறித்து மாநில வருவாய் துறை செயலர் மற்றும் மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர் ராஜாராம் தலைமையில், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேற்று ஆய்வு செய்
தார்.

பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காட்டுப்பாக்கம், கோபரசநல்லூர், செந்தூர்புரம், நசரத்பேட்டை, சென்னீர்குப்பம் மற்றும் பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட குமணன்சாவடி, கண்டோன்மெண்ட், எம்ஜிஆர் நகர், அம்மான் நகர், பனையாத்தம்மன் குட்டை, ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடமும் அந்த பகுதி மக்களிடம் கேட்டறிந்தார். மேலும் மழையால் பாதிப்பு ஏற்பட்டால் செய்ய வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, நகராட்சி சார்பில் மழைநீர் தேங்காதவாறு எடுக்கப்பட்டு உள்ள நீண்ட கால மற்றும் தற்காலிக நடவடிக்கைகள் குறித்து, நகர் மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், துணை தலைவர் ஸ்ரீதர், நகராட்சி ஆணையர் லதா மற்றும் அதிகாரிகள் விளக்கி கூறினர்.

கலெக்டர் பிரபுசங்கர் கூறியதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் மழையால் அதிகமாக பாதிக்கப்படக்கூடிய இடங்களாக 133 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை குறைவான மழை பெய்திருப்பதால் எந்த பகுதியிலும் மழை நீர் தேங்கி பாதிப்பு ஏற்படவில்லை. மழை நீரை வெளியேற்றும் வகையில் ஏற்பாடு செய்துள்ள பணிகள் பயன் இருப்பதாக பொதுமக்கள் கூறியுள்ளனர். மழைநீர் தேங்கினால் உடனடியாக அகற்றுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள பணியாற்றி வருகிறோம். சிக்கராயபுரம் கல்குவாரியில் அனைத்து குட்டைகளையும் ஒன்றிணைக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நோய் தடுப்பு நடவடிக்கையை பொறுத்தவரை தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், சுகாதாரத் துறை மூலம் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

காட்டுப்பாக்கம் ஊராட்சியில் நகராட்சிகளுக்கு இணையாக மழைநீர் கால்வாய்களை கட்டி வருகிறோம். பூந்தமல்லி நகராட்சியில் மழை நீர் கால்வாய்கள் நெடுஞ்சாலை அருகே இணைக்கும் வரை செய்து முடித்துள்ளனர். இந்த மழைக்குள் விரைந்து பணிகளை முடிப்பதற்காக உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையும் தாண்டி மழைநீர் தேங்கினால் அதனை அகற்ற மின் மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என கூறினார். இந்த ஆய்வின் போது கூடுதல் ஆட்சியர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் டாக்டர்.சுகபுத்திரா, உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆயுஷ் வெங்கட் வத்ஸ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ராஜவேல், நகராட்சி பொறியாளர் ஜெயக்குமார், சுகாதார ஆய்வாளர் ஐயப்பன், உதவி செயற்பொறியாளர் சிவசங்கரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்டாலின், காந்திமதி நாதன், வட்டாட்சியர் மாலினி, ஒன்றிய கவுன்சிலர் கவுதமன், மாவட்ட பிரதிநிதி லயன் சுதாகர் மற்றும் நகராட்சி, வருவாய் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம்
திருவள்ளூர்: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், வருவாய்த்துறை அரசு செயலருமான வி.ராஜாராமன் தலைமை தாங்கினார். திருவள்ளூர் கலெக்டர் த.பிரபுசங்கர் முன்னிலை வகித்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் தீயணைப்புத்துறை, காவல் துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண்மைத்துறை, சுகாதார துறை அதிகாரிகள், வட்டாட்சியர்கள், நகராட்சி அதிகாரிகள், பேரூராட்சி செயலர்கள், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள முன்களப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுவார்கள். கடந்த காலங்களில் மழை வெள்ளம் சூழும் பகுதிகளாக கண்டறியப்பட்ட நிலையில் தற்போதைய நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், மழை நீர் ஊருக்குள் புகாதவாறு தடுத்திட எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஜேசிபி இயந்திரங்கள், மின் மோட்டார்கள், ஜெனரேட்டர் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். திருவள்ளூர் வட்டத்தில் மழை வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என வருவாய்த்துறை அரசு செயலர் வி.ராஜாராமன் தெரிவித்தார்.

The post மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் நடத்திய ஆய்வில் மழையால் பாதிக்கப்படும் இடங்களாக 133 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது : மழைநீர் தேங்கினால் அகற்ற உடனடி நடவடிக்கை என பேச்சு appeared first on Dinakaran.

Tags : District Collector ,Prabhu Shankar ,Poontamalli ,Dinakaran ,
× RELATED திருக்குறள் முற்றோதல் திறனறித்...