×

காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டங்களில் தொடர் மழையால் 99 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின: பொதுப்பணி துறை அதிகாரிகள் தகவல்

காஞ்சிபுரம், நவ.16: காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய ஒருங்கிணைந்த மாவட்டங்களில் பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் உள்ள 99 ஏரிகள் தொடர் மழை காரணமாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது என்று பொதுப்பணி துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று முன்தினம் காலை முதல் தொடர் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால், அனைத்து பகுதிகளிலும் ஏரிகள், குளங்கள் மற்றும் நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி வழிந்து, சாலைகளில் மழைநீர் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஊர்ந்து சென்றன.

இந்நிலையில், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய ஒருங்கிணைந்த மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழை காரணமாக, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 909 ஏரிகளில் 99 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. மேலும் 149 ஏரிகள் 75-100 சதவீதத்திலும், 233 ஏரிகள் 50-75 சதவீதத்திலும், 294 ஏரிகள் 25-50 சதவீதத்திலும், 134 ஏரிகள் 25 சதவீதத்துக்கு குறைவாக நிரம்பியுள்ளன. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 41 ஏரிகள் 100 சதவீதம், 28 ஏரிகள் 75 சதவீதம், 65 ஏரிகள் 50 சதவீதம், 176 ஏரிகள் 25 சதவீதம், அதற்கு கீழ் 71 ஏரிகள் நிரம்பி வருகின்றன. இதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தமுள்ள 528 ஏரிகளில் 58 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன. 121 ஏரிகள் 90 சதவீதம், 168 ஏரிகள் 75 சதவீதம், 118 ஏரிகள் 50 சதவீதம், 63 ஏரிகள் 25 சதவீதம் நிரம்பி வருகின்றன. ஒட்டுமொத்தமாக 2 மாவட்டங்களிலும் விரைவில் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி விடும் என்று பொதுப்பணி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டங்களில் தொடர் மழையால் 99 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின: பொதுப்பணி துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Chengalpattu ,PWD ,Public Works Department ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு, காஞ்சிபுரம்...