×

டெல்லியில் இருந்து கொண்டு வரப்பட்ட நவீன டிரில்லிங் மெஷின் மூலம் மீட்பு பணி மீண்டும் ஆரம்பம்: மீட்பு படையினர் 2 பேர் காயம்

உத்தரகாசி: உத்தரகாண்டில் சுரங்க மீட்பு பணியில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் டெல்லியில் இருந்து விமானப்படை விமானம் மூலம் புதிய கனரக துளையிடும் இயந்திரம் கொண்டு வரப்பட்டு மீட்பு பணி தொடர்கிறது. உத்தரகாண்டில் உத்தரகாசி மாவட்டத்தில் சில்கியாரா- தண்டல்கான் இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணியின் போது அதன் ஒரு பகுதி எதிர்பாராதவிதமாக திடீரென சரிந்தது. இதில், வேலை செய்து கொண்டிருந்த 40 தொழிலாளர்கள் சிக்கினர். இவர்களுக்கு தேவையான ஆக்சிஜன், குடிநீர், உணவு, மருந்து, மின்சாரம் தொடர்ந்து வினியோகிக்கப்படுகிறது. இவர்களை மீட்க அதிநவீன துளையிடும் இயந்திரங்கள் உதவியுடன் மெல்லிய ஸ்டீல் குழாய் பதிக்கும் பணி நடந்து வந்தது.

இந்நிலையில் 4வது நாளாக நேற்றும் மீட்பு பணி தொடர்ந்தது. இதன் போது, சுரங்கத்தினுள் மண் சரிவதாலும், துளையிடும் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறினாலும் தப்பிக்கும் சுரங்கம் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மண் சரிவில் சிக்கிய மீட்பு படையினர் இருவர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக நிறுவனத்தின் இயக்குனர் அன்ஷு மணீஷ் கல்கோ கூறிய போது, “விமானப்படையின் ஹெர்குலிஸ் விமானம் மூலம் புதிய இயந்திரம் இரண்டு பாகங்களாக கொண்டு வரப்பட்டது. சுரங்கப் பகுதியில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள சினியாலிசர் ஹெலிகாப்டர் தளத்தில் வந்திறங்கியது. இது பொருத்தப்பட்ட உடன் மீட்பு பணிகள் தொடரும். ஒரு மணி நேரத்தில் 4-5 மீட்டர் துளையிடும் திறன் கொண்டதால், 10 மணி நேரத்தில் 50 மீட்டர் துளையிட முடியும் என்று நம்புகிறோம்,” என்று தெரிவித்தார்.

* குடும்பத்தினர் போராட்டம்

சுரங்கத்தினுள் சிக்கியுள்ள தொழிலாளர்களின் குடும்பத்தினர், உடன் வேலை பார்க்கும் சக தொழிலாளர்கள் மற்றும் பலர் சுரங்கத்தின் நுழைவுவாயில் முன்பு நின்று நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தொழிலாளர்களை மீட்பதில் தாமதம் ஏற்படுவதாகவும், அதிகாரிகளிடம் வேறு மாற்று திட்டங்கள் எதுவுமில்லை என்றும் குற்றம் சாட்டினர்.

The post டெல்லியில் இருந்து கொண்டு வரப்பட்ட நவீன டிரில்லிங் மெஷின் மூலம் மீட்பு பணி மீண்டும் ஆரம்பம்: மீட்பு படையினர் 2 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Uttarakhand ,Dinakaran ,
× RELATED பிரபல கல்வி நிறுவனங்களின் நுழைவுத்...