×

சேமியா பாக்கெட்டில் இறந்து கிடந்த தவளை திண்டுக்கல் அணில் சேமியா தயாரிப்புக் கூடத்தில் ரெய்டு: உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி

திண்டுக்கல்:சேமியா பாக்கெட்டில் தவளை கிடந்த புகாரைத் தொடர்ந்து, திண்டுக்கல்லில் உள்ள அணில் சேமியா தயாரிப்பு கூடங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ராம நகர் பகுதியைச் சேர்ந்தவர் பூமிநாதன் (37). இவர், இப்பகுதியில் உள்ள மளிகைக்கடையில் வாங்கிய அணில் சேமியா பாக்கெட்டிற்குள், இறந்து காய்ந்த நிலையில் தவளை ஒன்று இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட கடையின் மூலம் அணில் சேமியா நிர்வாகத்திற்கு புகார் அளித்தார். மேலும் இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத்துறைக்கும் புகார் தெரிவித்திருந்தார். இந்தப் புகார் எதிரொலியாக, திண்டுக்கல் மாவட்ட நியமன அலுவலர் கலைவாணி தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வன் தலைமையிலான குழுவினர் திண்டுக்கல் இ.பி காலனி, செட்டிநாயக்கன்பட்டி, சிட்கோ, மேட்டுப்பட்டி, பாடியூர் லட்சுமணபுரம் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் அணில் உணவு பொருள் தயாரிப்பு கூடங்களில் நேற்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது, புகாரில் தெரிவிக்கப்பட்ட பேட்ஜ் நம்பர் கொண்ட அணில் சேமியா பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். தொடர்ந்து இருப்பில் உள்ள சேமியா பாக்கெட்டுகளை விற்பனை செய்யக் கூடாது என்று தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டனர். ஒவ்வொரு தயாரிப்பு பொருட்களிலிருந்தும் உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கிண்டி உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். பகுப்பாய்வு அறிக்கை கிடைக்கப் பெற்றவுடன் விற்பனைக்கு அனுப்பப்பட்ட புகாருக்கு உள்ளான பேட்ஜ் எண் கொண்ட சேமியா பாக்கெட்டுகளை பொருட்களை திரும்ப பெற்று, தயாரிப்பாளர் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post சேமியா பாக்கெட்டில் இறந்து கிடந்த தவளை திண்டுக்கல் அணில் சேமியா தயாரிப்புக் கூடத்தில் ரெய்டு: உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Samiya ,Semiya ,Dindigul ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும்...