×

70 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது இந்தியா: கோஹ்லி, ஷ்ரேயாஸ் அபார சதம்; ஷமி விக்கெட் வேட்டை

மும்பை: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் முதல் அரையிறுதியில், நியூசிலாந்து அணியை 70 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா 4வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த பரபரப்பான இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். ரோகித், கில் இணைந்து இந்திய இன்னிங்சை தொடங்கினர். ரோகித் வழக்கம்போல அடித்து ஆட, இந்திய ஸ்கோர் வேகமெடுத்தது. ரோகித் கில் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 71 ரன் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்தது. ரோகித் 47 ரன் (29 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி சவுத்தீ வேகத்தில் வில்லியம்சன் வசம் பிடிபட்டார்.

அடுத்து கில் கோஹ்லி இணைந்து நியூசி. பந்துவீச்சை பதம் பார்த்தனர். இந்தியா 22.4 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்திருந்தபோது, காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் கில் ‘காயத்தால் ஓய்வு’ பெற்றார். அடுத்து கோஹ்லியுடன் ஜோடி சேர்ந்த ஷ்ரேயாஸ் அய்யர் பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட இந்திய ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. மறு முனையில் பொறுப்புடன் விளையாடிய கோஹ்லி ஒருநாள் போட்டிகளில் தனது 50வது சதத்தை பூர்த்தி செய்து உலக சாதனை படைத்தார். கோஹ்லி ஷ்ரேயாஸ் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 163 ரன் சேர்த்து அசத்தினர். கோஹ்லி 117 ரன் (113 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி சவுத்தீ வேகத்தில் கான்வே வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதன் பிறகும் அதிரடியைத் தொடர்ந்த ஷ்ரேயாஸ் கே.எல்.ராகுல் இணை 3வது விக்கெட்டுக்கு 54 ரன் சேர்த்தது. ஷ்ரேயாஸ் 105 ரன் (70 பந்து, 4 பவுண்டரி, 8 சிக்சர்), சூரியகுமார் 1 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
ரிட்டயர்டு ஹர்ட் ஆகி வெளியே சென்றிருந்த கில், கடைசி ஓவரில் மீண்டும் களத்துக்கு திரும்பி பேட்டிங்கை தொடர்ந்தார். இந்தியா 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 397 ரன் குவித்தது. கில் 80 ரன் (66 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்), கே.எல்.ராகுல் 39 ரன்னுடன் (20 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசிலாந்து பந்துவீச்சில் டிம் சவுத்தீ 3, போல்ட் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 398 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது.

தொடக்க வீரர்கள் கான்வே, ரச்சின் இருவரும் தலா 13 ரன் எடுத்து ஷமி வேகத்தில் ஆட்டமிழக்க, நியூசிலாந்து 7.4 ஓவரில் 39 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், கேப்டன் கேன் வில்லியம்சன் டேரில் மிட்செல் இணைந்து பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் அரை சதம் அடிக்க, இந்திய தரப்பு சற்று பதற்றமானது. வில்லியம்சன் 52 ரன் எடுத்திருந்தபோது பும்ரா பந்துவீச்சில் கொடுத்த எளிய கேட்ச் வாய்ப்பை ஷமி நழுவவிட்டார். நியூசி. ஸ்கோர் 200 ரன்னை கடந்து முன்னேற, கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டம் நியூசி.க்கு சாதகமாக மாறுவதுபோல் தோன்றியது. அதற்கேற்ப டேரில் மிட்செல் சதம் விளாசி அசத்தினார். இந்த நிலையில், ஷமியை மீண்டும் பந்துவீச அழைத்தார் ரோகித். இந்த மாற்றத்துக்கு கை மேல் பலன் கிடைத்தது.

ஷமி வீசிய 33வது ஓவரின் 2வது பந்தில் வில்லியம்சன் (69 ரன், 73 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்), 4வது பந்தில் டாம் லாதம் (0) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, நியூசி. 32.4 ஓவரில் 220 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திடீர் சரிவை சந்தித்தது.
எனினும், டேரில் மிட்செல் கிளென் பிலிப்ஸ் ஜோடி தொடர்ந்து போராட ஆட்டம் மீண்டும் பரபரப்பானது. கடைசி 8 ஓவரில் 100 ரன்னுக்கும் மேல் தேவைப்பட்டதால், நியூசி. வீரர்கள் தொடர்ந்து அதிரடி காட்ட வேண்டிய நெருக்கடியில் சிக்கினர். பிலிப்ஸ் 41 ரன் (33 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி பும்ரா வேகத்தில் ஜடேஜாவிடம் பிடிபட, இந்தியவீரர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

சாப்மேன் 2 ரன் எடுத்து குல்தீப் சுழலில் சிக்சர் அடிக்க ஆசைப்பட்டு, எல்லைக்கோட்டருகே ஜடேஜாவிடம் பிடிபட்டார். கடைசி வரை மிரட்டிக் கொண்டிருந்த டேரில் மிட்செல் 134 ரன் (119 பந்து, 9 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசி ஷமி வேகத்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாக, நியூசி. போராட்டம் முடிவுக்கு வந்தது. நியூசிலாந்து அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் 327 ரன் எடுத்து 70 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அந்த அணி உலக கோப்பை நாக் அவுட் போட்டியில் இந்தியாவிடம் தோற்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய பந்துவீச்சில் முகமது ஷமி 57 ரன் விட்டு கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தினார். பும்ரா , குல்தீப், சிராஜ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். விக்கெட் வேட்டை நடத்திய ஷமி ஆட்ட நாயகன் விருது பெற்றார். 70 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியது. நடப்பு தொடரில் இந்தியா தொடர்ச்சியாக 10வது வெற்றியை பதிவு செய்தது. ஆஸ்திரேலியா தென் ஆப்ரிக்கா அணிகளிடையே இன்று நடக்கும் 2வது அரையிறுதியில் வெற்றி பெறும் அணியுடன், நவ.19ம் தேதி அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் பைனலில் இந்தியா மோதும்.

* 50வது ஒருநாள் சதம்! சச்சினை முந்தினார் கோஹ்லி
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் சச்சினுடன் முதலிடத்தை (49 சதம்) பகிர்ந்துகொண்டிருந்தார் கோஹ்லி. நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று மும்பையில் நடந்த அரையிறுதியில் தனது 50வது சதத்தை விளாசி உலக சாதனை படைத்ததுடன் சச்சினை பின்னுக்குத் தள்ளி முதலிடத்துக்கும் முன்னேறி அசத்தினார். நடப்பு தொடரில் இது அவரது 3வது சதமாகும்.
* 4வது உலக கோப்பை தொடரில் விளையாடும் கோஹ்லி, நாக்-அவுட் ஆட்டம் ஒன்றில் சதம் அடிப்பது இதுவே முதல் முறையாகும்.
* ஒரு உலக கோப்பையில் அதிக ரன் குவித்த சச்சினின் (673 ரன்) சாதனையையும் கோஹ்லி நேற்று முறியடித்தார். நடப்பு தொடரில் அவர் இதுவரை 10 போட்டியில் 711 ரன் (அதிகம் 117, சராசரி 101.57, சதம் 3, அரை சதம் 5) குவித்து முதலிடம் வகிக்கிறார்.
* ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங் சாதனையை (13,704 ரன்) முறியடித்த கோஹ்லி (13,794 ரன்) 3வது இடத்துக்கு முன்னேறினார். இந்த பட்டியலில் சச்சின் (18,426 ரன்), இலங்கையின் சங்கக்கரா (14,234 ரன்) முதல் 2 இடங்களில் உள்ளனர்.

* அதிக சிக்சர்… ரோகித் சாதனை!
உலக கோப்பை போட்டிகளில் அதிக சிக்சர் விளாசிய வீரர்கள் பட்டியலில் இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா (51 சிக்சர்) முதலிடம் பிடித்துள்ளார். அரையிறுதியில் நேற்று 4 சிக்சர்களைத் தூக்கிய அவர், வெஸ்ட் இண்டீஸ் நட்சத்திரம் கிறிஸ் கேல் சாதனையை (49 சிக்சர்) முறியடித்தார். நடப்பு தொடரில் மட்டுமே அவர் இதுவரை 28 சிக்சர்கள் அடித்துள்ளார். அந்த வகையில், 2015 உலக கோப்பையில் கிறிஸ் கேல் 26 சிக்சர் அடித்து படைத்த சாதனையும் உடைந்து நொறுங்கியது.
* நடப்பு தொடரில் கோஹ்லி 8 முறை 50+ ஸ்கோர் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார். சச்சின் 2003 உலக கோப்பையிலும், வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் 2019 உலக கோப்பையிலும் தலா 7 முறை 50+ ஸ்கோர் அடித்திருந்தனர்.
* ஷ்ரேயாஸ் அய்யர் நேற்று 67 பந்தில் சதம் அடித்தார். உலக கோப்பை நாக்-அவுட் போட்டியில் அடிக்கப்பட்ட அதிவேக சதமாக இது அமைந்தது. முன்னதாக, ஆஸி. வீரர் கில்கிறிஸ்ட் இலங்கைக்கு எதிராக 2007 பைனலில் 72 பந்தில் சதம் அடித்திருந்தார்.

* பிரதமர் வாழ்த்து
ஒருநாள் போட்டிகளில் 50வது சதம் விளாசி சச்சின் சாதனையை முறியடித்த கோஹ்லிக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X வலைத்தள பக்கத்தில் அவர் பதிந்துள்ள தகவலில், ‘கோஹ்லியின் இந்த சாதனை மைல்கல் அவரது அயராத உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும், அசாத்தியமான திறமைக்கும் சான்றாக விளங்குகிறது. அவருக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். வரும் தலைமுறைக்கு, அவர் தொடர்ந்து புதிய இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

The post 70 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது இந்தியா: கோஹ்லி, ஷ்ரேயாஸ் அபார சதம்; ஷமி விக்கெட் வேட்டை appeared first on Dinakaran.

Tags : India ,New Zealand ,Kohli ,Shreyas ,Shami ,Mumbai ,ICC World Cup ODI series ,Shreyas Abhara Sadam ,Shami Wicket Hunt ,Dinakaran ,
× RELATED 2-2 என தொடரை சமன் செய்தது பாக்.