×

கோவை தீத்திபாளையத்தில் நள்ளிரவில் தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானைகள்

*தக்காளி, வாழைகள் சேதம்

தொண்டாமுத்தூர் : கோவை மேற்கு தொடர்சி மலை பகுதிகளில் ஏராளமான யானைகள் உள்ளன. இவை அவ்வபோது உணவு தேடி வனத்துக்கு ஒட்டிய கிராம பகுதிகளுக்கு படையெடுத்து வருகின்றன. இதனால் மனித-விலங்கு மோதல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. வனத்துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டாலும் அழையா விருந்தாளியாக வந்த வண்ணம்தான் உள்ளன.

நேற்று முன்தினம் நள்ளிரவு வனத்திலிருந்து வெளியேறிய 10க்கும் மேற்பட்ட யானைகள் தீத்திபாளையம் பகுதியில் புகுந்தன. பின்னர் தோட்டத்தில் அறுவடை செய்து டிப்பர்களில் வைத்திருந்த தக்காளி மற்றும் வாழைகளை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின. இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க பிரதிநிதி கொங்கு பெரியசாமி கூறுகையில், ‘‘10க்கும் மேற்பட்ட யானைகள் நள்ளிரவு வனத்திலிருந்து வெளியேறு தீத்திபாளையம் ஊருக்குள் புகுந்தன.

இப்பகுதியில் உள்ள தக்காளி மற்றும் வாழை தோட்டங்களுக்கு சென்று யானைகள் உணவு உட்கொண்டன. யானைக் கூட்டம் அடுக்கி வைக்கப்பட்டிருந்த தக்காளி டிப்பர்களை சூறையாடின. தோட்டம் மட்டுமின்றி அருகாமையில் உள்ள ரேஷன் கடைக்குள் புகுந்த காட்டு யானைகள் ரேஷன் கடையில் உள்ள உணவுப் பொருட்களையும் உட்கொண்டு ரேஷன் கடையும் சேதப்படுத்தின. வழக்கமாக தோட்டத்திற்குள் மட்டும் வரும் யானைகள் தற்போது ஊருக்குள்ளும் புகுந்திருப்பதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். எனவே மாவட்ட வனத்துறை இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

The post கோவை தீத்திபாளையத்தில் நள்ளிரவில் தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானைகள் appeared first on Dinakaran.

Tags : KOWAI DITHIPALAYA ,KOI ,Koi Dithipalayam ,
× RELATED கோவை வால்பாறை அருகே எஸ்டேட் தொழிலாளர்கள் முற்றுகை!!