×

சஷ்டியை நோக்க சரவணபவனார்… கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய சென்னிமலை முருகன் கோயில்

ஈரோட்டில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சென்னிமலை. இவ்வூரில் 1740 அடி உயரம் கொண்ட மலைமேல் அமைந்துள்ளது சுப்ரமணியசுவாமி கோயில். ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் யுத்தம் நடந்தபோது ஆதிசேஷனுடைய சிரம் விழுந்த இடம் தான் கோயிலாக உள்ளது என்று கூறுகின்றனர். முருகன் நடுநாயகமாக அமர்ந்திருக்க மூலவரை சுற்றி நவகிரகங்கள் உள்ளன. மூலவரை வழிபட்டாலே நவகிரகங்களை வழிபட்ட பலன் உண்டு. சென்னிமலை கோயிலுக்கும், காங்கயம் சிவன்மலை, பழனிமலைக்கும் இடையே சுரங்கப்பாதை உள்ளதாக கருதப்படுகிறது. இதற்கான கல்வெட்டுகளும் உள்ளன.சென்னிமலை முருகன் சந்நதியில்தான் கந்தசஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

தேவராயசுவாமிகள் என்ற முருகபக்தர் இயற்றிய கந்தசஷ்டி கவசத்தை அரங்கேற்ற முருகனை வேண்டியபோது முருகனே கனவில் தோன்றி சென்னிமலை தலத்திலே வந்து அரங்கேற்றம் செய்ய அருளினார். அதன்படி சென்னிமலை தலத்திலே கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்யப்பட்டது. முருகனை சென்றடைய சில படிகள் நடந்து சென்றதும், காவல் கடவுள்களான இடும்பன், கந்தன் ஆகியோரது கோயிலை காணலாம். இக்கோயிலில் கந்தன் கிரீடத்துடனும், வலது கையில் வேல், இடது கையில் கோழியுடனும் காட்சி தருகிறார். அதேபோல் தனி சந்நதியில் காணப்படும் இடும்பன் கிரீடத்துடன், வலது கையில் சுதையும், சிவகிரி, சக்திகிரி ஆகிய மலைகளை சுமந்தபடி உள்ளனர்.

தொடர்ந்து சென்றால், மயில்வாகன கொறடு, வள்ளியம்மன் பாதம் ஆகிய மண்டபங்கள் உள்ளன. இதில் பக்தர்கள் சற்று இளைப்பாறி விட்டு செல்லலாம். இதை தாண்டி படி சென்றால் ஆற்றுமலை விநாயகரை தரிசிக்கலாம். இதையடுத்து, தொரட்டி மரம் என்ற அபூர்வ வகையான மரத்தை காணலாம். முருகனை வணங்கச் செல்லும் யாருக்காவது பேய் பிடித்து இருந்தால் அல்லது மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்தால் இந்த மரத்தை கடந்துவிட்டால் பேய், பிசாசு அனைத்தையும் இந்த மரம் துரத்தியடித்து விடும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. பழமை வாய்ந்த இக்கோயில் சிவாலயச்சோழ மன்னர் காலத்தில் கட்டப்பட்டதாகும். இம்மன்னன் பிரம்மஹத்தி தோஷம் நீங்க அனைத்து கோயில்களுக்கும் சென்று வரும் போது நொய்யல் ஆற்றின்;

கரையில் ஒரு நாள் நீராடும் போது இம்மலையினை கண்டு தனது படைகளுடன் மலைமேல் வந்து கோயிலில் தரிசனம் செய்த போது முருகன் அர்ச்சகராக வந்து தன்னைத்தானே பூஜித்து மன்னருக்கு பிரம்மஹத்தி தோஷம் நீக்கி அருளியதால் பிரம்மஹத்தி தோஷம் நீக்கிய தலமாக சென்னிமலை சுப்ரமணியசாமி கோயில் விளங்கி வருகின்றது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொங்கி வழிந்தோடும் மாமாங்கத் தீர்த்தம். அக்னி ஜாத மூர்த்தி (இரண்டு தலைகள் உள்ள முருகன்) என்ற சுப்ரமணியர் வேறு எங்கும் இல்லை. இக்கோயிலின் முக்கிய விழாவாக தைப்பூசத் தேர்த் திருவிழா இருந்து வருகிறது.

திருமணம், வரன்கள், விவசாயம், கிணறுவெட்டுதல், புதிய வியாபாரம் தொடங்குதல் ஆகியவை குறித்து முடிவு செய்ய முருகனுக்கு அர்ச்சனை செய்து சிரசுப் பூ உத்தரவு கேட்டு நல்ல உத்தரவு கிடைத்த பின்பு காரியத்தை தொடங்குவதை பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். கந்தசஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்யப்பட்ட இக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை சஷ்டி நாளிலும், ஐப்பசி மாத கந்த சஷ்டி நாட்களிலும் குழந்தை வரம் வேண்டி விரதம் இருந்து முருகனை மனமுருக வேண்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

The post சஷ்டியை நோக்க சரவணபவனார்… கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய சென்னிமலை முருகன் கோயில் appeared first on Dinakaran.

Tags : Saravanabhavanar ,Shashti… ,Chennimalai Murugan ,Temple ,Kanda Shashti Kavasam ,Chennimalai ,Erode ,Sashti ,Chennimalai Murugan Temple ,Kanda ,
× RELATED இந்த வார விசேஷங்கள்