×

சுதந்திர போராட்ட தியாகியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யா (102) காலமானார்..!!

சென்னை: சுதந்திர போராட்ட தியாகியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யா (102) காலமானார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆத்தூரில் 1921 ஜூலை 15ல் பிறந்தவர் சங்கரய்யா. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்துக் கொண்டிந்தபோதே சுதந்திர போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதால் 4 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர்.

கல்லூரி படிப்பை முடிக்கும் தருவாயில் சங்கரய்யா சிறையில் அடைக்கப்பட்டார். 18 மாதங்கள் சிறையில் இருந்து மீண்டும் வெளியே வந்தவர் மீண்டும் மாணவர்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டார். பாளையங்கோட்டையில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு 4 ஆண்டு காலம் சிறையில் இருந்தார். நாடு விடுதலை ஆவதற்கு முன்பும் பின்பும் சிறையில் இருந்தவர். 8 ஆண்டுகாலம் சிறையில் இருந்தவர்.

1964ல் கருத்து வேறுபாட்டால் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்தபோது மார்க்சிஸ்ட் கட்சியை தொடங்கிய தலைவர்களில் சங்கரய்யாவும் ஒருவர். ஜனசக்தி நாளிதழில் முதல் பொறுப்பாசிரியராக இருந்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான தீக்கதிரின் முதல் ஆசிரியரும் ஆவார். தீண்டாமை ஒழிப்பு, சாதிமறுப்பு திருமணங்கள், தொழிலாளர்கள் உரிமைக்காக பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்தவர். முதல் தகைசால் விருதை சங்கரய்யாவுக்கு வழங்கி தமிழ்நாடு அரசு கவுரவித்தது.

தகைசால் விருதுடன் அரசு வழங்கிய ரூ.10 லட்சம் நிதியை கொரோனா நிவாரணத்துக்கு வழங்கியவர். தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக 3 முறை பதவி வகித்தவர். வாழ்நாள் முழுவதும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு 95 வயதிலும் ஆணவக்கொலைகளுக்கு எதிராக போராடியவர். இவர் வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் நேரில் சென்று நலம் விசாரித்து வந்தனர். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா உடல்நலக் குறைவால் காலமானார்.

The post சுதந்திர போராட்ட தியாகியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யா (102) காலமானார்..!! appeared first on Dinakaran.

Tags : SANKARAYA ,MARTYR ,FREEDOM ,MARXIST COMMUNIST PARTY ,Chennai ,Thoothukudi ,Martyr Sankaraya ,Dinakaran ,
× RELATED நாடு சந்திக்க இருக்கக்கூடிய 2வது...