×

திருத்தணி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா தொடக்கம்

திருத்தணி, நவ.15: திருத்தணி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா நேற்று தொடங்கியது. திருத்தணி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் தீபாவளி நோன்பு மறுநாள் முதல் கந்த சஷ்டி, புஷ்பாஞ்சலி மற்றும் லட்சார்ச்சனை திருவிழா ஏழு நாட்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நேற்று கொடியேற்றத்துடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது. தொடர்ந்து தினமும் அதிகாலை, 5 மணியளவில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும், காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை உற்சவர் சண்முகருக்கு மலைக்கோவில் காவடி மண்டபத்தில் லட்சார்ச்சனையும் நடக்கிறது. முதல் நாளான நேற்று காலை மூலவருக்கு புஷ்ப அலங்காரமும், மாலை கோயில் நாதஸ்வர வித்வான்கள் வழங்கும் இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது. இரண்டாம் நாளான இன்று மூலவருக்கு பட்டு அலங்காரமும், 3ம் நாள் (16 ம் தேதி) மூலவருக்கு தங்க கவச அலங்காரமும், 4ம் நாள் (17ம் தேதி) மூலவருக்கு திருவாபரண அலங்காரமும் நடைபெறுகிறது. தொடர்ந்து 5 ம் நாள் (18ம் தேதி) மூலவருக்கு வெள்ளி கவர அலங்காரமும், 6ம் நாள் (19ம் தேதி) கல்யாண உற்சவருக்கு திருக்கல்யாணமும், காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகப்பெருமானுக்கு 18ம் தேதி மாலையில் புஷ்பாஞ்சலியும் நடக்கிறது. 19ம் தேதி நண்பகலில் உற்சவர் சண்முகருக்கு திருக்கல்யாணத்துடன் கந்தசஷ்டி விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் சு.தரன், இணை ஆணையரும், செயல் அலுவலருமான க.ரமணி, அறங்காவலர்கள் ஜி.உஷாராவி, கோ.மோகனன் வி.சுரேஷ்பாபு, மு.நாகன் மற்றும் கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்துள்ளனர்.

The post திருத்தணி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Gandashashti ,Tiruthani Murugan Temple ,Thiruthani ,Thiruthani Murugan Temple ,Annual Diwali Fasting ,Kanthashashti Festival ,Dinakaran ,
× RELATED திருத்தணி முருகன் கோயிலுக்கு...