×

அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா: கொடியேற்றத்துடன் துவக்கம்

சென்னை: ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை இலக்காக கொண்டு, தமிழ்நாட்டில் 70வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா கொடியேற்றத்துடன் துவங்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் 70வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவின் தொடக்க நாளான நேற்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், 7 வண்ணங்களை உள்ளடக்கிய கூட்டுறவுக் கொடியினை ஏற்றி வைத்துப் பணியாளர்களுடன் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னையில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ள தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய வளாகத்தில். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் கே.கோபால் தலைமையேற்று, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் டாக்டர் என்.சுப்பையன் முன்னிலையில் ஏழு வண்ணங்களை உள்ளடக்கிய கூட்டுறவு கொடியினை ஏற்றி வைத்துக் கூட்டுறவு வாரவிழாவிற்கான உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆண்டுதோறும் முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை நாடு முழுவதும் புதுடில்லியிலுள்ள தேசியக் கூட்டுறவு ஒன்றியத்தின் வழிகாட்டுதலின்படி, கூட்டுறவு வாரவிழா கொண்டாடப்படுகிறது.

அவ்வகையில் 70வது அனைத்திந்தியக் கூட்டுறவு வார விழா-2023 “ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் மற்றும் நீடித்த மற்றும் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளில் கூட்டுறவு அமைப்புகளின் பங்கு” என்ற கருப்பொருளை மையமாக கொண்டு 14ம் தேதி(நேற்று) “கூட்டுறவு அமைப்புகளின் தற்போதைய வளர்ச்சி” என்ற தலைப்பிலும், 15ம் தேதி(இன்று) “கடன் சாராக் கூட்டுறவு அமைப்புகள் மற்றும் அனைவருக்குமான உள்ளடக்கிய நிதியம்” என்ற உள்பட பல தலைப்புகளில் தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் கொண்டாடப்படவுள்ளது. மேலும் 20ம் தேதி புதுக்கோட்டையில் மாநில அளவிலான கூட்டுறவு வார விழாவின் நிறைவு விழாவில் 2022-2023ம் நிதியாண்டில் சிறப்பாகச் செயல்பட்ட பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களுக்கு பாராட்டு கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளன. சென்னையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கூடுதல் பதிவாளர்கள் ச.சுப்பிரமணியன், சிவ.முத்துக்குமாரசுவாமி, ஆர்.பிருந்தா, என்.மிருணாளினி மற்றும் பலர் பங்கேற்றனர்.

The post அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா: கொடியேற்றத்துடன் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : All India Co-operative Week ,Flag Hoisting ,Chennai ,70th ,All India Cooperative Week ,Tamil Nadu ,Tamil Nadu… ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?