×

ஆசிரியர்களுக்கு அமைச்சர் வேண்டுகோள் விளையாட்டு பாட வேளையை கடன் வாங்குவதை கைவிடுங்கள்

சென்னை: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்த விழாவில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில், தமிழ்நாட்டில் சிறந்த பள்ளிகள் மற்றும் போட்டிகளில் பரிசு வென்ற மாணவ மாணவியருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகள் வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:நவீன இந்தியாவை உருவாக்கியவர் நேரு என்றால், நவீன தமிழகத்தை உருவாக்கியவர் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி. மேலும் பள்ளிக் கல்வித்துறையை தனித் துறையா பிரித்தவர் கலைஞர்தான். 1996ம் ஆண்டுகளில் கணினிக்கென தனிப் பாடப் பிரிவை உருவாக்கிய பெருமையும் அவரையே சேரும். கலைத் திருவிழாக்களில் வென்று மலேசியா சென்று திரும்பிய மாணவர்களிடம் பேசும் போது விமானத்தில் கொடுத்த உணவைவிட, தமிழ்நாட்டில் வழங்கப்படும் காலைச் சிற்றுண்டியே சிறப்பாக உள்ளது என்றும் மாணவர்கள் தெரிவித்தனர். அது தான் காலை சிற்றுண்டி திட்டத்துக்கு கிடைத்த சிறப்பு. தமிழ்நாடு முதல்வர் தலைமையிலான திராவிட மாடல் அரசு, இந்திய ஒன்றியத்துக்கு வழிகாட்டும் வகையில் செயல்பட்டு வருகிறது.

இல்லம்தேடிக் கல்வி திட்டம் முதல் வாசிப்பு இயக்கம் வரை 50க்கும் மேற்பட்ட முன்ெனடுப்புகள் பள்ளிக் கல்வித்துறையில் எடுக்கப்பட்டுள்ளன. பள்ளிகளில் அறிவியல் மற்றும் கணக்குப் பாடங்கள் எடுக்கின்ற ஆசிரியர்கள் விளையாட்டு பாட வேளையை கடன்வாங்காதீர்கள். முடிந்தால் உங்கள் பாட வேளையின் போது குழந்தைகளை விளையாட அனுமதியுங்கள். தமிழ்நாட்டு முதல்வர் ஒவ்வொரு முறையும் மாணவர்களை சந்திக்கும் போதெல்லாம் மாணவர்களிடம் தெரிவிப்பது என்னவென்றால், படிப்பு ஒன்றுதான் உங்களிடம் இருந்து பறிக்க முடியாத ஒரே சொத்து என்பார். அதனால் உங்களை தயாகவும், தந்தையாகவும் காக்க அரசு தயாராக உள்ளது. இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

 

The post ஆசிரியர்களுக்கு அமைச்சர் வேண்டுகோள் விளையாட்டு பாட வேளையை கடன் வாங்குவதை கைவிடுங்கள் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Sports Minister ,Udayanidhi ,Anna Centenary Library ,Kotturpuram, Chennai ,Children's Day ,
× RELATED பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி...