கொழும்பு: இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே சகோதரர்கள் தான் காரணம் என்று இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இலங்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக இலங்கை உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பு விவரம் வருமாறு: 2019ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டுக்கு இடையில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே மற்றும் மூத்த அதிகாரிகள் தான் காரணம். அவர்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை தவறாக கையாண்டு இலங்கையில் எப்போதும் இல்லாதவகையில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்திவிட்டனர். இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் டபிள்யூ.டி.லக்ஷ்மன் மற்றும் திறைசேரியின் முன்னாள் செயலாளர்களான பி.பி. ஜயசுந்தர மற்றும் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோரும் இதில் குற்றவாளிகள். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.இந்த தீர்ப்புக்கு ஆதரவாக 4 நீதிபதிகளும் எதிராக ஒரு நீதிபதியும் இருந்தனர்.
The post பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே சகோதரர்கள் தான் காரணம்: இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.