×

பரோல் கைதிகளை கண்காணிக்க ‘ஜிபிஎஸ்’: உள்துறை அமைச்சகம் அனுமதி

புதுடெல்லி: சிறைக் கைதிகள் பரோலில் விடுவிக்கப்படும்போது அவர்களை கண்காணிக்கும் வகையில் ‘ஜிபிஎஸ்’ கருவி போன்றவற்றை பொருத்தும் நடைமுறையை மாநிலங்கள் பின்பற்றலாம் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிறைத் துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தின் சிறப்பு குழு கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி ஒன்றிய உள்துறையிடம் விரிவான அறிக்கை சமர்ப்பித்தது. அதில், ‘ஜாமீனில் விடுதலையாகும் கைதிகளின் காலில் ஜிபிஎஸ் கருவியை பொருத்தலாம்’ என்று பரிந்துரை செய்தது.

இந்த நடைமுறையை காஷ்மீர் போலீசார் உடனடியாக அமல் செய்தனர். இந்நிலையில் அனைத்து மாநிலங்களும் ஜிபிஎஸ் கருவியை பயன்படுத்த அனுமதி வழங்கிய ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு; சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கடும் குற்றம் செய்த குற்றவாளிகளை, மற்ற குற்றவாளிகளிடம் இருந்து பிரிக்க வேண்டும். தற்காலிக விடுதலை அல்லது பரோல் விடுப்பில் உள்ள கைதிகளை கண்காணிக்கும் வகையில் அவர்கள் மீது மின்னணு கருவிகளை பயன்படுத்தலாம். அதேபோல் கைதிகள், தங்களின் நடமாட்டத்தை கண்காணிக்கும் இத்தகைய கருவியை அணிய விருப்பம் தெரிவித்தால், சிறையில் இருந்து அவர்களுக்கு விடுப்பு அளிக்கலாம்.

வெளியில் சென்ற பிறகு விதியை மீறி, கருவியை அகற்றினால் எதிர்காலத்தில் வழங்கப்படும் எந்தவொரு சிறை விடுமுறையையும் அக்கைதிக்கு வழங்குவதை ரத்து செய்யலாம். எனவே பரோலில் விடுவிக்கப்படும் கைதிகளை கண்காணிக்கும் வகையில், அவர்களுக்கு ஜிபிஎஸ் கருவிகளை மாநிலங்கள் பொருத்தலாம். அனைத்து மத்திய மற்றும் மாவட்ட சிறைகளில் அடைக்கப்பட்ட அனைத்து கைதிகளுக்கும் பொருந்தும். சிறைகளை திறம்பட நிர்வகிப்பதற்கும் கண்காணிப்பதற்கும், சிறைகள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பிற்காகவும், சிறை நிர்வாகம் முழுவதையும் டிஜிட்டல் மயமாக்கவும், தரவுத்தளத்தை ஒன்றோடொன்று இணைக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

* சிறையில் செல்போன் பயன்படுத்தினால் 3 ஆண்டு தண்டனை
சிறைகளில் செல்போன்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க, ‘செல்லுலார் ஜாமர்’ அமைக்க வேண்டும். சிறைக்குள் தொலைபேசிகளைப் பயன்படுத்தினால் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். அல்லது ரூ.25 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். போதைக்கு அடிமையானவர்கள், மது அருந்துபவர்கள், முதல் முறை குற்றவாளிகள், வெளிநாட்டு கைதிகள், வயதான மற்றும் பலவீனமான கைதிகள் என்று கைதிகளை பிரித்து தனித்தனியாக அவர்களை தங்கவைக்க வேண்டும்.

The post பரோல் கைதிகளை கண்காணிக்க ‘ஜிபிஎஸ்’: உள்துறை அமைச்சகம் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Home Ministry ,New Delhi ,Dinakaran ,
× RELATED சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை மகரஜோதி தரிசனம்..!