×

70வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

சென்னை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய தலைமையில் தமிழ்நாட்டை ஒரு லட்சம் கோடி பொருளாதாரமாக மாற்றும் நோக்குடன், 70வது அனைத்திந்தியக் கூட்டுறவு வார விழா “ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் மற்றும் நீடித்த நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளில் கூட்டுறவு அமைப்புகளின் பங்கு” என்ற கருப்பொருளுடன் கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது. தமிழ்நாட்டில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவின் தொடக்க நாளான இன்று (14.11.2023) சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஒருங்கிணைந்த வளாகத்தில் உள்ள மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கே ஆர்.பெரியகருப்பன் அவர்களால் ஏழு வண்ணங்களை உள்ளடக்கிய கூட்டுறவுக் கொடியினை ஏற்றி வைத்துப் பணியாளர்கள் ஊடே உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இன்று (14.11.2023) சென்னையில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ள தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய வளாகத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர். கே.கோபால், இ.ஆ.ப., அவர்கள் தலைமையேற்று, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் டாக்டர் என்.சுப்பையன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் ஏழு வண்ணங்களை உள்ளடக்கிய கூட்டுறவு கொடியினை ஏற்றி வைத்துக் கூட்டுறவு வாரவிழாவிற்கான உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. மக்களுக்காக, மக்களால் உருவாக்கப்பட்டு இலாப நோக்கமின்றிச் சேவை மனப்பான்மையோடு செயல்படும் இயக்கம் கூட்டுறவு இயக்கம். இவ்வியக்கமானது, ஏழை எளிய, நலிவுற்ற மக்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம் மேம்பாடு அடையும் வகையில், கைத்தறி மற்றும் துணிநூல், பால்வளம், பட்டு வளர்ச்சி, மீன்வளம், காதி, கதர் கிராமியம், கால்நடை பராமரிப்பு, தொழில் மற்றும் வணிகம், சமூகநலம், வேளாண்மை, ஊரக வளர்ச்சி, வீட்டுவசதி, சர்க்கரை உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்காக பெரும்பங்காற்றி வருகின்றது.

மேலும், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் மற்றும் 14 செயற்பதிவாளர்களின் கட்டுப்பாட்டில் செயல்படும் தொடக்க வகைக் கூட்டுறவுச் சங்கங்கள் முதல் மாவட்ட மற்றும் மாநில அளவிலான 22,000க்கும் மேற்பட்ட கூட்டுறவுச் சங்கங்கள், அனைத்து வகை மக்களும் எளிதில் அணுகும் வகையில் புதிய தொழில்நுட்பத்தைப் புகுத்தி சிறப்பாகச் செயல்பட்டுவருகின்றன. “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்ற பாட்டுக்கொரு புலவன் பாரதியின் எண்ணத்தை ஈடேறச் செய்து வருகிறது கூட்டுறவியக்கம். மனிதர்கள் மனிதர்களாக மதிக்கப்பட்டு, மனித இனத்துக்கே முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு மகத்தான “மக்கள் இயக்கமாகிய கூட்டுறவு இயக்கத்தில் இணைந்துள்ளோர் நன்மைகளையும், கூட்டுறவு இயக்கம் ஏற்படுத்தியுள்ள சாதனைகளையும், கூட்டுறவுச் சங்கங்கள் ஆற்றி வருகின்ற பணிகளையும் மக்கள் மன்றத்தில் எடுத்துரைத்து, மக்கள் அனைவரும் கூட்டுறவில் இணைந்து பயன்பெற வேண்டும் என்ற வகையில், ஒவ்வொரு ஆண்டும் கூட்டுறவு வார விழா கொண்டாடப்படுகிறது.

ஆண்டுதோறும் முன்னாள் பாரத பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளான நவம்பர்த் திங்கள் 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நாடு முழுவதும் புதுடில்லியிலுள்ள தேசியக் கூட்டுறவு ஒன்றியத்தின் வழிகாட்டுதலின்படி, கூட்டுறவு வாரவிழா கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் இவ்வாண்டும் 70வது அனைத்திந்தியக் கூட்டுறவு வார விழா-2023 “ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் மற்றும் நீடித்த மற்றும் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளில் கூட்டுறவு அமைப்புகளின் பங்கு” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு 14.11.2023 அன்று “கூட்டுறவு அமைப்புகளின் தற்போதைய வளர்ச்சி” என்ற தலைப்பிலும், 15.11.2023 அன்று “கடன் சாராக் கூட்டுறவு அமைப்புகள் மற்றும் அனைவருக்குமான உள்ளடக்கிய நிதியம்” என்ற தலைப்பிலும், 16.11.2023 அன்று “கூட்டுறவு அமைப்புகளைக் கணினிமயமாக்குதல் மற்றும் மேம்படுத்துதல்” என்ற தலைப்பிலும் 17.11.2023 அன்று “கூட்டுறவு அமைப்புகளைப் பரவலாக்குதல் மற்றும் எளிமைப்படுத்துதல்” என்ற தலைப்பிலும், 18.11.2023 அன்று “அரசு மற்றும் தனியார் கூட்டுறவுப் பங்களிப்பு” என்ற தலைப்பிலும், 19.11.2023 அன்று “இளைஞர்கள், பெண்கள், விளிம்பு நிலை மக்களுக்கான கூட்டுறவு அமைப்புகள்” என்ற தலைப்பிலும், மற்றும் நிறைவு நாளான 20.11.2023 அன்று “கூட்டுறவுக் கல்வி மற்றும் பயிற்சியைச் சீரமைத்தல்” என்ற தலைப்பிலும் அனுசரிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் கொண்டாடப்படவுள்ளது.

மேலும், மாநில மற்றும் மாவட்ட அளவில் நடைபெறும் விழாக்களில் கூட்டுறவு தொடர்பான விழிப்புணர்வு, கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பொது மக்களுக்கு ஏற்படும் நற்பயன்கள் தெரியப்படுத்தப்படுகின்றன. அதுமட்டுமன்றி, இரத்தான முகாம், மரக்கன்றுகள் நடுதல், பள்ளி/கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டி நடத்துதல். கூட்டுறவாளர்களைக் கௌரவித்தல் உள்ளிட்ட பலதரப்பட்ட நலத்திட்டப் பணிகள் மற்றும் நிகழ்ச்சிகளை அனைத்து வகை கூட்டுறவு அமைப்புகள் ஒருங்கிணைந்து நடத்துவதன் மூலம் தமிழ்நாட்டில் கூட்டுறவு அமைப்புகள் மிகவும் சிறப்பாகச் செயல்பட ஊக்குவிக்கப்படும். மேலும் 20.11.2023 அன்று, புதுக்கோட்டையில் நடைபெறும் மாநில அளவிலான கூட்டுறவு வார விழாவின் நிறைவு விழாவில் 2022-2023ஆம் நிதியாண்டில் சிறப்பாகச் செயல்பட்ட பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களுக்கு பாராட்டுக் கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளன. சென்னையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கூடுதல் பதிவாளர்கள் திரு.ச.சுப்பிரமணியன் ,திரு.சிவ.முத்துக்குமாரசுவாமி, திருமதி ஆர்.பிருந்தா, திருமதி.என்.மிருணாளினி, மற்றும் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அலுவலக உயர் அலுவலர்கள்/பணியாளர்கள், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய அலுவலர்கள்/பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

The post 70வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : 70th All India Cooperative Week ,Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்