×

முதல்வர் மு.க.ஸ்டாலினின் கனவுத் திட்டத்தில் முன்னேற்றம்!: ஒகேனக்கல் 2ம் கட்ட கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு வெளிநாட்டில் இருந்து கடன் பெற ஒன்றிய அரசு ஒப்புதல்..!!

சென்னை: ஒகேனக்கல் 2-ம் கட்ட கூட்டுக்குடிநீர் திட்டத்தை ஜப்பான் நிதியுதவியுடன் செயல்படுத்த ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.7,386 கோடி மதிப்பீட்டில் ஒகேனக்கல் 2-ம் கட்ட கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு சமர்பித்த ஒகேனக்கல் 2-ம் கட்ட கூட்டுக்குடிநீர் திட்ட அறிக்கைக்கு வெளிநாட்டில் இருந்து கடன் பெற ஒன்றிய அரசின் நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

ஒகேனக்கல் திட்டத்தால் 45 லட்சம் பேர் பயன்பெறுவர்:

ஒகேனக்கல் 2-ம் கட்ட கூட்டுக்குடிநீர் திட்டத்தால் 45 லட்சம் பேர் பயன்பெறுவர். தொழில் நகரான ஒசூர் மாநகராட்சி தருமபுரி, கிருஷ்ணகிரி நகராட்சி மக்களுக்கு இத்திட்டத்தால் காவிரி நீர் கிடைக்கும். தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 16 பேரூராட்சிகள், 6,818 கிராமங்களும் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தால் பயன் அடையும். நிலத்தடி நீரில் நச்சுத்தன்மை கொண்ட ஃபுளோரைடு அதிகம் இருப்பதால், பாதுகாப்பான குடிநீரை வழங்குவதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவுத் திட்டத்தில் முன்னேற்றம்:

கலைஞர் ஆட்சியில் உள்ளாட்சி துறை அமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் 25 ஆண்டுகால கோரிக்கை கலைஞர் ஆட்சியில் நிறைவேறியது. மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்ததும் 2-ம் கட்ட ஒகேனக்கல் திட்டம் நிறைவேற்றப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

ஒகேனக்கல் திட்டத்துக்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்தபோதும் திட்டத்தை நிறைவேற்றுவதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருந்தார். ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் தனது வாழ்நாள் சாதனை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு கடன் பெறுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளிப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தொய்வு ஏற்பட்ட நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.

ஒகேனக்கல் 2-வது கூட்டுக்குடிநீர் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்:

ஜப்பானிய நிதியுதவி அல்லது உலக வங்கி நிதியுதவி பெற்று இத்திட்டம் விரைந்து செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு சன்நியூஸ்-க்கு தகவல் அளித்துள்ளது. ஒன்றிய அரசின் ஒப்புதலை அடுத்து ஒகேனக்கல் திட்டத்துக்கு வெளிநாட்டு கடன் பெறும் நடவடிக்கையை விரைவுபடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஒசூர் மக்களுக்கு வரப்பிரசாதம் – பிரகாஷ் எம்.எல்.ஏ

வேகமாக வளர்ந்து வரும் தொழில் நகரான ஒசூர் மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இத்திட்டம் அமையும் என ஒசூர் எம்.எல்.ஏ. பிரகாஷ் தெரிவித்திருக்கிறார். ஒசூரை சுற்றி மேலும் பல தொழிற்சாலைகள் அமைய ஓகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் உதவும் எனவும் பிரகாஷ் எம்.எல்.ஏ. நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலினின் கனவுத் திட்டத்தில் முன்னேற்றம்!: ஒகேனக்கல் 2ம் கட்ட கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு வெளிநாட்டில் இருந்து கடன் பெற ஒன்றிய அரசு ஒப்புதல்..!! appeared first on Dinakaran.

Tags : M.U. K. ,Stalin ,EU Government ,Chennai ,Okanakal ,Japan ,Dinakaran ,
× RELATED திராவிடப்பேரொளி அயோத்திதாசப்...