×

பெருமாநல்லூர் அருகே கார் விபத்தில் 6 மாத குழந்தையுடன் கோவை திமுக கவுன்சிலர் பலி

*படுகாயமடைந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை

திருப்பூர் : திருப்பூர் அருகே கார் விபத்தில் திமுக கவுன்சிலர் மற்றும் அவரது 6 மாத கைக்குழந்தை பரிதாபமாக பலியாகினர். படுகாயமடைந்த அவரது மனைவிக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கோவை மாவட்டம், போத்தனூர் செட்டிபாளையம் 10-வது வார்டு திமுக கவுன்சிலராக இருந்தவர் சந்தோஷ்குமார் (27). இவரது மனைவி இந்துமதி (23). இந்த தம்பதிக்கு பிறந்து 6 மாதமே ஆன காஜல் என்ற பெண் குழந்தை இருந்தது. தீபாவளி பண்டிகையையொட்டி சேலத்தில் உள்ள கோயிலுக்கு சாமி கும்பிட நேற்று முன்தினம் இரவு காரில் சந்தோஷ்குமார், தனது மனைவி, குழந்தையுடன் சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 1.30 மணி அளவில் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே உள்ள ஈட்டிவீரம்பாளையம் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது இவர்களது கார் மீது பின்னால் வந்த மற்றொரு கார் பயங்கரமாக மோதியது. இதில் சந்தோஷ்குமாரின் கார் கட்டுப்பாட்டை இழந்து ஓடி தடுப்புச்சுவரில் மோதி சாலையைவிட்டு இறங்கி நின்றது.பலத்த காயமடைந்த சந்தோஷ்குமார் மற்றும் 6 மாத பெண் குழந்தை காஜல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். சந்தோஷ்குமாரின் மனைவி இந்துமதி பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினார்.

அதிகாலையில் நடந்த இந்த விபத்து சத்தம் கேட்டு அந்த பகுதியில் உள்ளவர்கள் சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர். அவர்கள் பெருமாநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இந்துமதி மீட்கப்பட்டு திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சந்தோஷ்குமார் ஓட்டி வந்த கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது கோவை சவுரிபாளைத்தை சேர்ந்த சித்தார்த் (22) என்பவரது கார் என்பது தெரியவந்தது.

சித்தார்த் தனக்கு சொந்தமான காரில் நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த க்ளாட்வின் (21), ஆண்ட்ரிவ் (22), ஜீவன் (22) மற்றும் அருண் (22) ஆகியோருடன் செங்கப்பள்ளியில் ஒரு காபி கடைக்கு வந்துள்ளார். அவர்களது கார் வேகமாக வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இவ்விபத்தில் சித்தார்த் உள்பட 5 பேருக்கும் காயம் ஏற்பட்டு, அவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தில் பலியான சந்தோஷ்குமார் மற்றும் காஜல் ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 6 மாத கைக்குழந்தையுடன் கோவையை சேர்ந்த திமுக கவுன்சிலர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post பெருமாநல்லூர் அருகே கார் விபத்தில் 6 மாத குழந்தையுடன் கோவை திமுக கவுன்சிலர் பலி appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,DMK ,Perumanallur ,Tirupur ,councilor ,
× RELATED கோவைக்கு தேவையான திட்டத்தை பெற்று தருவேன்