×

தொடர் விடுமுறை காரணமாக திரண்டனர் சாத்தனூர் அணையில் பொழுதுபோக்கிய சுற்றுலா பயணிகள்

*படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்

தண்டராம்பட்டு : தொடர் விடுமுறை காரணமாக சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் திரண்டனர். இவர்கள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். திருவண்ணாமலை மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்குவது சாத்தனூர் அணையாகும். இந்த அணை 119 அடி உயரம் கொண்டது. இந்த அணைக்கு கிருஷ்ணகிரி அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும், அணையின் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் அணை தற்போது 117 அடி தண்ணீர் உயர்ந்துள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி நீர் மின்சாரம் தயாரிக்க கூடிய வழியாக 950 கனஅடி நீர் வினாடிக்கு தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்காக தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டதால் நேற்று, நேற்றுமுன்தினம் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் சாத்தனூர் அணைக்கு வந்தனர். அவர்கள் அங்குள்ள ஆதாம் ஏவாள்பூங்கா, அறிவியல் பார்க், டைனோசர் பார்க், அர்த்தமுள்ள கருத்துக்களை சொல்லும் விலங்குகள் பார்க், தொங்கு பாலம், முதலை பண்ணை, மயில் கூண்டு, பறவைகள் கூண்டு, வீரமங்கை பார்க் உள்ளிட்ட இடங்களை சுற்றிப்பார்த்தனர். பொதுப்பணித்துறை மூலம் நபருக்கு கட்டணமாக ₹5, பைக்குகளுக்கு ₹10, கனரக வாகனங்களுக்கு ₹50 வசூலிக்கப்பட்டது. போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் சாத்தனூர் அணைக்கு இயக்கப்பட்டது.

75க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சாத்தனூர் அணையில் வரக்கூடிய கனரக வாகனங்கள் கடும் சோதனைக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டது. பட்டாசு, மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், விதிமீறி எடுத்து சென்றவர்களிடம் போலீசார் பறிமுதல் செய்தனர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

The post தொடர் விடுமுறை காரணமாக திரண்டனர் சாத்தனூர் அணையில் பொழுதுபோக்கிய சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Chatanur Dam ,Thandarampatu ,Dinakaran ,
× RELATED சுட்டெரிக்கும் வெயில் எதிரொலி...