×

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.467 கோடிக்கு மது விற்பனை: டாஸ்மாக் அதிகாரிகள் தகவல்

சென்னை: தீபாவளி பண்டிகை நடந்து முடிந்த நிலையில் பட்டாசு, புத்தாடை, இனிப்பு விற்பனையை காட்டிலும் டாஸ்மாக் மது விற்பனை பேசு பொருளாக மாறி உள்ளது. கடந்த 2 நாட்களில் தமிழகம் முழுவதும் 467 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.தமிழ்நாடு அரசின் சார்பில் நடத்தப்படும் டாஸ்மாக் நிறுவனம் 5 மண்டலங்களாக பிரித்து டாஸ்மாக் கடைகள் மூலம் மது விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் தீபாவளிக்கு முந்தைய நாளான நவம்பர் 11ம் தேதி அன்று மதுரை மண்டலத்தில் ரூ.52.73 கோடிக்கும், சென்னை மண்டலத்தில் ரூ.48.12 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ.40.20 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.40.02 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.39.78 கோடிக்கும் மதுவிற்பனை நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நவம்பர் 12ம் தேதி அன்று திருச்சி மண்டலத்தில் 55.60 கோடிக்கும், சென்னை மண்டலத்தில் 52.98 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் 51.97 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் 46.62 கோடிக்கும், கோவை மண்டலத்தில் 39.61 கோடிக்கும் மது விற்பனை நடந்துள்ளது. இந்த ஆண்டு மது விற்பனை செய்ய எந்த இலக்கும் நிர்ணயிக்கப்படவில்லை. அதிகமாக விற்க வேண்டும் என்று அதிகாரிகள் கட்டாயப்படுத்தவும் இல்லை. இதனால் அதிகாரிகளின் வற்புறுத்தல், டார்கெட் எதுவும் இல்லாமல் குடிமக்களாக விரும்பி வாங்கியதால் இந்த அளவு விற்பனையாகியுள்ளது.

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது 3 நாட்கள் விடுமுறை வந்தது. இதனால் 3 நாளில் ரூ.708 கோடிக்கு விற்பனையானது. ஆனால் இந்த ஆண்டு 2 நாளில் 467 ேகாடிக்கு விற்பனையாகியுள்ளது. இன்றும் விடுமுறை என்பதால் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில் கடந்த 11ம் தேதி மதுரை மண்டலம் 52.73 கோடிக்கு விற்பனை செய்து முதலிடத்தைப் பிடித்தது. கடந்த ஆண்டும் மதுரையில்தான் அதிகமாக விற்பனையானது. ஆனால், 12ம் தேதி மதுரையை பின்னுக்குத் தள்ளிவிட்டு திருச்சி மண்டலம் 55.60 கோடிக்கு மது விற்பனை செய்து, மதுரையை முந்தியது.

The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.467 கோடிக்கு மது விற்பனை: டாஸ்மாக் அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Diwali festival ,Tasmak ,Chennai ,Dinakaran ,
× RELATED மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10-க்கு...