சென்னை: தொடர் விடுமுறை முடிந்து சென்னை நோக்கி வருபவர்களால், பரனூர் சுங்கச்சாவடியில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் கூடுதலாக இரண்டு பூத்துகள் திறக்கப்பட்டுள்ளன. தீபாவளி விடுப்பு முடிந்து சொந்த ஊர் சென்ற மக்கள் மீண்டும் நேற்று முதல் சென்னைக்கு திரும்பி வருவதால் வழக்கத்திற்கு மாறாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பரனூர் முதல் பெருங்களத்தூர் வரை சிக்னல் உள்ள பகுதிகள், வாகனங்கள் திரும்பும் இடங்கள் அதிக அளவில் உள்ளன. இந்த காரணங்களால் நேற்று வாகன நெருக்கம் அதிகமாக காணப்பட்டது. பெருங்களத்தூரில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்துள்ளன. போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனிடையே இன்று காலை போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. திருச்சி – சென்னை ஜி.எஸ்.டி சாலை மார்க்கமாக வழக்கமாக ஆறு பூத்களில் வாகனங்களை அனுப்பி வைப்பது வழக்கம். மக்கள் அதிக அளவில் வருவதால் கூடுதலாக இரண்டு பூத்கள் திறக்கப்பட்டு எட்டு பூத்களில் வாகனங்களை அனுப்பி வைத்து வருகின்றனர். இந்நிலையில், தொடர் விடுமுறை முடிந்து இன்று வேலை நாட்கள் என்பதால், நேற்று மாலை முதலே தென் மாவட்டங்களான நாகர்கோவில், நெல்லை, மதுரை, திருச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி பொதுமக்கள் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் படையெடுக்க துவங்கியுள்ளனர். இதன் காரணமாக செங்கல்பட்டு அடுத்துள்ள பரனுர் சுங்கச்சாவடி மற்றும் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
The post தொடர் விடுமுறை முடிந்து சென்னை நோக்கி படையெடுக்கும் வாகனங்கள் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்: கூடுதலாக இரண்டு பூத் திறப்பு appeared first on Dinakaran.