×

தெருக்களில் மலைபோல் குவிந்துள்ளன இதுவரை 210 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்: களப் பணியில் 19,600 தூய்மை பணியாளர்கள்

சென்னை: சென்னை தெருக்களில் மலைபோல் குவிந்திருக்கும் பட்டாசு கழிவுகளை அகற்ற 20 ஆயிரம் பணியாளர்களை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. இதுவரை 210 டன் அகற்றப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் தீபாவளி அன்று காலை முதல் இரவு முதல் விடிய விடிய பல இடங்களில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் சென்னையே புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் பட்டாசின் குப்பைகள், பட்டாசு வைக்கப்பட்ட அட்டைப்பெட்டிகள் என கழிவுகள் தெருக்களில் மலை போல் குவிந்து காணப்பட்டது.

பட்டாசு கழிவுகளால் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு உள்ளிட்ட பல பிரச்னைகள் ஏற்படலாம் என்பதால் இதனை உடனுக்குடன் அப்புறப்படுத்த அந்தந்த மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் துரிதமாக செயல்பட தொடங்கியுள்ளது. அந்த வகையில் சென்னையில் மட்டும் பட்டாசு கழிவுகளை அகற்ற 19,600 தூய்மை பணியாளர்களை சென்னை மாநகராட்சி களம் இறக்கியுள்ளது. இரவு முழுக்க விடாமல் பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் மாலை தொடங்கிய சுத்திகரிப்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. பல இடங்களில் இருக்கும் குப்பைகளை கைகளால் அள்ளி அதற்கு உரிய வாகனங்களில் ஏற்றி அனுப்பி வருகிறார்கள்.

பட்டாசு பேப்பர்கள், அட்டைகள் தெருக்களை நிரப்பி உள்ளன. இதனால் சாலைகள் குப்பை கடலாக மாறி உள்ளது. இவற்றை அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன. மாநகராட்சி கணக்குப்படி 300 டன் குப்பைகள் சேர்ந்துள்ளன. இதில் சென்னையில் இதுவரை 210 டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. பட்டாசு கழிவுகளை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை அன்று சேகரிக்கப்படும் குப்பை அபாயகரமான கழிவுகள். இதனால் சென்னை மாநகராட்சி சார்பில் தனியாக சேகரித்து கும்மிடிப்பூண்டியில் உள்ள கழிவுகளை முறைப்படுத்தி செயலாக்கும் நிலையத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  சென்னையில் 15 மண்டலங்களில் 11ம் தேதி 3.67 டன், 12ம் தேதி 53.79 டன், 13ம் தேதி 152.28 என மூன்று நாட்களில் 209.74 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. இவற்றில் முதற்கட்டமாக 54 டன் கிலோ கும்மிடிப்பூண்டிக்கு கொண்டு செல்லப்பட்டன.

* தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு

பட்டாசு கழிவுகளை அகற்றும் பணிகளை சென்னை மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் நேற்று காலை ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தீபாவளிக்கு வெடிக்கப்பட்ட பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் சிறப்பாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த கழிவுகள் அபாயகரமானது என்பதால் வீட்டுக்கு வீடு சென்று தனி பைகளில் சேகரிக்கப்படுகிறது. தெருக்களில் உள்ள கழிவுகளும் அகற்றப்பட்டு வருகிறது. இந்த கழிவுகளை கொட்டுவதற்கு அந்தந்த பகுதிகளில் சிறு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தீபாவளி நாளிலும் இந்த பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை மிகவும் பாராட்டுகிறேன்’’ என்றார்.

The post தெருக்களில் மலைபோல் குவிந்துள்ளன இதுவரை 210 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்: களப் பணியில் 19,600 தூய்மை பணியாளர்கள் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED சென்னையில் தனக்குத் தானே பிரசவம்...