×

இந்த வார விசேஷங்கள்

ஸ்ரீதன்வந்திரி ஜெயந்தி
11.11.2023 – சனி

தேவர்கள் அமுதம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். அப்பொழுது பலவிதமான பொருட்கள் பாற்கடலில் இருந்து வெளிப்பட்டன. சாட்சாத் மகாவிஷ்ணுவே அமிர்த கலசத்துடன் பாற்கடலில் இருந்து வெளிப்பட்டார். உலகத்தவர்களின் நோயை குணப்படுத்தும் மருந்து மூலிகைகள் அவர் திருக்கரத்தில் இருந்தன. வேதம் “வைத்யோ நாராயண ஹரி:” (மருத்துவனாய் நின்ற மாமணி வண்ணன்)’’ என்று சொல்வதால், அந்த பரமாத்மாவே தன்வந்திரி பகவானாக அவதரித்தான். அப்படி அவதரித்த நாள் ஐப்பசி மாதம் தேய்பிறை ஹஸ்த நட்சத்திரமும், திரயோதசி திதியும் கூடிய நாள் ஆகும். அந்த நாள் உலகெங்கும்
ஸ்ரீதன்வந்திரி ஜெயந்தி நாளாகக் (தேசிய ஆயுர்வேத தினம்) கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீரங்கத்தில் ஒருமுறை ஸ்ரீராமானுஜர், ஸ்ரீரங்கநாதரின் திருமுகத்தைக் கண்டு, அவருடைய நிவேதனப் பொருளில் ஏதோ குறை இருப்பதாகக் கண்டு கொண்டு, உடனே தன்வந்திரி பகவான் சந்நதியில் தயாரித்து நிவேதனம் செய்யப்பட்ட மருந்துக் குடிநீரை (கஷாயம்) ஸ்ரீரங்கநாதருக்குப் படைத்தார் என்று ஒரு செய்தி உண்டு. திருவரங்கத்தில் தாயார் சந்நதிக்கு முன்பு தன்வந்திரிக்கு தனிச் சந்நதி உண்டு.

இந்த நாள் தனத்திரையோதசி நாளாக வடநாட்டில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஸ்ரீதன்வந்திரி பகவானை நினைத்து, அவருடைய மந்திரத்தை பாராயணம் செய்து வணங்குவதன் மூலமாக, நாம் உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் பெறலாம்.

“ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தன்வந்த்ரயே
அமிர்த கலச ஹஸ்தாய சர்வாமய
விநாசநாய
த்ரைலோக்ய நாதாய ஸ்ரீமஹா
விஷ்ணவே நமஹ.’’

தீபாவளி மருந்தில் தன்வந்திரி பகவான் உறைகிறார். எனவே, தீபாவளி மருந்து உட்கொள்ளும்போது ஸ்ரீதன்வந்திரி பகவானை மனபூர்வமாகப் பிரார்த்திக்க வேண்டும்.

தீபாவளி
12.11.2023 – ஞாயிறு

இன்று தீபாவளித் திருநாள். தீபாவளி திருநாளில் நாம் எப்படிக் கொண்டாட வேண்டும் தெரியுமா?

1. இயன்றவரை விடிகாலையில் எழுந்திருக்க வேண்டும். அன்று சூரிய உதயத்துக்கு முன்னாலே நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். இந்த நல்லெண்ணையில் சாட்சாத் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.

2. சூரிய உதயத்துக்கு முன்னால் வெந்நீரில் நீராட வேண்டும். இன்றைய தினம் மட்டும் நாம் எங்கிருந்தாலும், எந்த நீரில் நீராடினாலும், ஈறேழு 14 லோகத்தில் இருக்கக் கூடிய அத்தனை தீர்த்தங்களிலும் கங்கை பிரவேசிக்கிறாள். இன்றைய காலை நீராட்டம் என்பது கங்கையில் புனித நீராடியதற்கு சமம் என்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றன.

3. தீப + ஆவளி என்பது தீபாவளி. தீபங்களின் வரிசையை குறிக்கிறது. எனவே அந்தப் பெயருக்கு ஏற்ப, நாம் இயன்றளவு, வாசலில் ஆரம்பித்து, பூஜை அறை, கூடம், துளசி மாடம், சமையலறை என எல்லா இடங்களிலும் தீபங்களை ஏற்ற வேண்டும். பஞ்சு திரி போட்டு நல்லெண்ணெயில் தீபங்களை ஏற்ற வேண்டும். தீபங்கள் அனைத்தும் கிழக்கு நோக்கி இருப்பதாக அமைக்க வேண்டும். சிலர் வாசலில் கோலமிட்டு அதில் தீபங்களை அமைத்து அலங்காரம் செய்வார்கள். எது எப்படியாக இருந்தாலும், தீபாவளி அன்று காலையிலும் மாலையிலும் வரிசையாக தீபங்களை ஏற்றுவது அந்தப் பண்டிகையை நிறைவாக கொண்டாடுவதற்குச் சமம்.

4. அன்று இயன்றவரை பகவானிடத்தில் வைத்துப் படைக்கப்பட்ட புத்தாடைகளை அணிய வேண்டும். ஏதேனும் ஒரு பலகாரத்தையோ நாம் சொந்தமாக வீட்டில் எண்ணெயில் சுட்டு, (அன்று எண்ணெய் சட்டி வைக்க வேண்டும் என்று சாஸ்திரம் இருக்கிறது) அதை இறைவனுக்குப் படைத்து, உற்றார் உறவினர்களுடன் உண்ண வேண்டும். நண்பர்களுக்கு பலகாரங்களை தந்து மகிழ வேண்டும். விருந்தினர்களை உபசரிக்க வேண்டும்.

5. மிக முக்கியமாக இன்றைய தினம், வயதில் சிறியவர்கள், குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்க வேண்டும்.

6. தீபாவளி நோன்பு இருப்பவர்கள் விடாமல் முறையாகச் செய்ய வேண்டும்.

7. குடும்பத்தில் எத்தனை பிரச்னைகள் இருந்தாலும், இன்று ஒரு நாள் மட்டுமாவது, அத்தனை பிரச்னைகளையும் மறந்துவிட்டு, மனமகிழ்ச்சியுடன் குதூகலமாக, நல்ல மங்கலகரமான சொற்களைப் பேசி மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும்.

8. மாலையில் கலசத்தை வைத்து லட்சுமி குபேர பூஜையை செய்வது வீட்டில் உள்ள வறுமையை விரட்டும். குறைந்தபட்சம் மகாலட்சுமியோடு கூடிய மகாவிஷ்ணு படத்திற்கு மணமிக்க மலர்களை சாற்றி, அல்லது துளசி சரத்தை சாற்றி, மணம் உருகி பிரார்த்தனை செய்வது, வீட்டில் செல்வச் செழிப்பை உண்டாக்கும்.

சோமவார அமாவாசை
13.11.2023 – திங்கள்

இன்று ஐப்பசி மாத அமாவாசை. அமாவாசை விரதம் இருந்து முன்னோர்களை நினைத்து தில தர்ப்பணம் செய்ய வேண்டிய நாள். இந்த அமாவாசை, சந்திரனுக்குரிய திங்கட்கிழமை வருவதால் மிக விசேஷமானது. இன்றைய தினம் அரசமரத்தை பிரதட்சணம் செய்வது அஸ்வமேத யாகம் செய்த பலனைத் தரும். பாவங்களை எல்லாம் போக்கும். நாம் விரும்பியதை நிறைவேற்றும். இன்றைய அமாவாசைக்கு வேறொரு சிறப்பு உண்டு. 6 முக்கியமான கிரகங்கள் இந்த அமாவாசையில் இணைகின்றன. சுக்கிரனுக் குரிய துலா ராசியில் இந்த அமாவாசை நடைபெறுகின்றது.

அந்த ராசியில் சூரிய பகவானும் செவ்வாயும் இருக்க மாத்ரு காரகனாகிய சந்திரன் இணைகிறார். காலதேவன் எமனுடைய சகோதரனாகிய சனி பகவான் இந்த துலா ராசியை பத்தாம் பார்வையாகப் பார்வையிடுகிறார். சோமவார அமாவாசையில் மெளன விரதம் இருந்தால் ஆயிரம் பசுக்களை தானமாக வழங்கியதற்கு இணையான புண்ணியம் கிடைக்கும். இன்று சிவவழிபாடு செய்வது ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றி வைக்கும்.

நதிகளில் புனித நீராடி, ருத்ர ஜபம், ருத்ர வழிபாடு செய்பவர்களின் நோய், வறுமை, துன்பங்கள், பாவங்கள் அனைத்தும் நீங்கி, செல்வ செழிப்பான வாழ்வை பெறுவார் என்பது ஐதீகம். சோமவார அமாவாசையில் விரதம் இருப்பவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் துன்பமே வராது என்பது நம்பிக்கை.

சிவபெருமானுக்கு உகந்த நாளான சோமவார அமாவாசையில் விரதம் இருந்து வழிபட்டால் 14 பிறவிகளில் செய்த பாவங்கள் நீங்குவதுடன், நினைத்தது நடக்கும். சோமவார அமாவாசை அன்று பித்ருக்களை நினைத்து கண்டிப்பாக எள்ளும் தண்ணீரும் இரைக்க வேண்டும். இந்த நாளில் பித்ருக்களுக்கு உரிய காய்களான புடலங்காய், வாழைக்காய் ஆகியவற்றை கண்டிப்பாக சமையலில் சேர்த்து முன்னோர்களுக்கு படையலிட வேண்டும்.

இந்த நாளில் பெண்கள் அரசமரத்தை வழிபடுவது வழக்கம். இவ்வாறு வழிபட்டால் வீட்டில் மங்கல காரியங்கள் அனைத்தும் தடையின்றி நடைபெறும். அரச மரத்தை, திருமாலாக நினைத்து 108 முறை வலம் வந்து, நெய் விளக்கேற்றி வழிபட வேண்டும். இதனால் பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழலாம். குடும்ப ஒற்றுமை சிறக்க இந்த நாளில் சிவன் கோயிலுக்கு சென்று வழிபடலாம்.

சிவனின் லிங்க திருமேனிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருநீறு ஆகியவற்றால் அபிஷேகம் செய்வது சிறந்தது. வில்வ அர்ச்சனை செய்வதும் சிறப்பானதாகும்.

எனவே இந்த அற்புதமான நாளில் முன்னோர்களை நினைத்து விரதம் இருந்து வழிபடுவது என்பது நம்முடைய குடும்பத்தில் ஏற்படக்கூடிய பல்வேறு சுபத் தடைகளை விலக்கும்.

பூசலார் நாயனார் குருபூஜை
14.11.2023 – செவ்வாய்

“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்க்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவனே சிவலிங்கம்
கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே’’
– என்பது திருமூலர் வாக்கு.

இதில் ஒரு அற்புதமான உண்மையை திருமூலர் சொல்கிறார். நாம் பல்வேறு திருத்தலங்களில் வான் உயரமான கோபுரங்களுடன், பிரம்மாண்டமான பிராகாரங்களுடன், ஆலயங்களை பார்க்கிறோம். ஆனால், திருமூலர் சொல்வது அந்த ஆலயங்கள் எல்லாம் சிறிய கோயில்கள்தான். அப்படியானால் பெரிய கோயில் எது? என்கிற கேள்வி எழுகிறது அல்லவா.

திருமூலர் சொல்லுகின்றார்; இறைவன் எந்தக் கோயிலை, தனக்கு உரியதாக, பெருமையாக, பெரிய கோயிலாக, நினைத்து உள்ளே போக முயல்கின்றானோ, அந்தக் கோயிலே பெருங் கோயில். அப்படிப் பார்த்தால், ஒவ்வொருவர் உள்ளத்துள்ளும் இறைவன் வந்து அமர நினைக்கின்றான். அதனால் உள்ளமே பெருங்கோயில். உள்ளமே பெருங்கோயிலாக நினைத்தவர்கள் நிஜமாலுமே உண்டா என்று சொன்னால் உண்டு. அவர்தான் பூசலார் நாயனார்.

பூசலார் நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். தொண்டை நாட்டில் திருநின்றவூரில் மறையவர் குலத்திலே தோன்றியவர். சிவனடி யாராகிய அன்பர்க்கு ஏற்றபணி செய்தலே பிறவிப்பயன் எனக் கொண்டு பொருள்தேடி அடியார்க்கு அளித்து வந்தவர். சிவபெருமானுக்குத் திருக்கோயில் அமைத்துப் பணிசெய்ய விரும்பியவர். தம்மிடத்துப் பொருள் இல்லாமையால் அதற்குரிய பொருளை வருந்தித் தேடியும் பெற இயலாது துடித்தவர் இந்நிலையில் மனத்திலே சிவபெருமானுக்குத் திருக்கோயில் அமைக்க எண்ணினார்.

மனத்தின்கண் மாசின்றி, திருப்பணிக்கு வேண்டிய கல் மரம் முதலிய சாதனங்களையும் தச்சர் முதலிய பணியாளர்களையும் தேடிக் கொண்டார். நல்ல நாள் பார்த்துத் திருக்கோயிற் பணியைத் தொடங்கி இரவும் துயிலாமல் கட்டி முடித்தார். திருக்கோயிலுள்ளே சிவபெருமானை எழுந்தருளச் செய்வதற்கேற்ற நல்லநாளும் வேளையும் நிச்சயித்தார். இதே காலத்தில், காடவர்கோன் எனும் அரசன் காஞ்சி நகரத்திலே இறைவனுக்குத் திருக்கற்றளி அமைத்தான். குடமுழுக்கு செய்ய பூசலார் வகுத்த அந்த நாளையே குறித்தான்.

அந்த நாளின் நள்ளிரவில் காடவர் கோமான் கனவில் எழுந்தருளிய சிவபெருமான், நின்றவூர்ப்பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த நன்மை மிக்க ஆலயத்துள் நாளை நாம் புகுவோம்; உன் ஆலய குடமுழுக்கை நாளைய தினத்தில் வைத்துக் கொள்ளாது மற்றொரு நாளில் செய்வாயாக என்று
பணித்தருளினார். பல்லவர்கோன், பெரியதிருக்கோயிலை அமைத்த பெருந்தகையாரைச் சென்று காணவிரும்பித் திருநின்றவூரை அடைந்தான். அங்கு அருகணைந் தவர்களை நோக்கி, ‘பூசலார் அமைத்த கோயில் எங்கே உள்ளது?’ என்று கேட்டார். அதுகேட்ட நின்றவூர் மக்கள், ‘பூசலார் இவ்வூரிற் கோயில் எதுவும் கட்டவில்லை’ என்றனர்.

மன்னன் அவ்வூர் மறையவர்களை அழைத்து ‘பூசலார் யார்’ எனக்கேட்டறிந்து, அவர் இருக்குமிடத்திற்குத் தானே சென்று அவரை வணங்கி, தேவரீர் அமைத்த திருக்கோயில் யாது? ‘‘அக்கோயிலில் சிவபெருமானை எழுந்தருளச் செய்யும் நாள் இந்த நாள் என்று இறைவர் தெரிவித்தாரே’’ என்றார். பூசலார், அரசன் உரைகேட்டு மருண்டு, ‘இறைவர் என்னையும் பொருளாக அருள்செய்தாராயின் அக்கோயிலின் பெருமை எத்தகையது? என்று தமக்குள்ளேயே சிந்தித்துத் தாம் மனத்தால் முயன்று செய்த திருக்கோயிலின் அமைப்பினை மன்னனுக்கு விளங்க எடுத்துரைத்தார். அரசன் அதிசயித்துப் பூசலாரை வணங்கித் தனது நகருக்குச் சென்றான். அந்த பூசலார் நாயனாரின் குருபூஜை இன்று. (ஐப்பசி அனுஷம்)

முடவன் முழுக்கு
17.11.2023 – வெள்ளி

கார்த்திகை முதல் நாள், வெள்ளிக் கிழமை, மகாலட்சுமிக்குரிய பூராட நட்சத்திரத்தில் பிறக்கிறது. ஐப்பசி மாதம் முழுக்க காவிரியில் துலாஸ்தானம் செய்வது சிறப்பு. காரணம், சகல நதிகளும் காவிரியில் நீராடி, தங்கள் பாவத்தைப் போக்கிக் கொள்வதாக ஐதீகம். இந்த 30 நாட்களிலும் ஏதாவது ஒரு நாளாவது துலா காவிரி ஸ்நானம் என்று சொல்லப்படுகின்ற ஐப்பசி மாத நீராடலைச் செய்ய வேண்டும்.

அப்படித் தவறியவர்கள் கார்த்திகை மாதம் முதல் நாள் காவிரியில் நீராடினால் துலாஸ்தானம் செய்த புண்ணியத்தை அடையலாம் ஒரு காலத்தில் கால் நடக்க முடியாத ஒரு மாற்றுத்திறனாளி காவிரியில் நீராட விரும்பி, வெகு தூரத்தில் இருந்து நடந்து வந்தான். ஆனால், அவன் வந்த பொழுது ஐப்பசி மாதம் முடிந்துவிட்டது.

அதற்காக அவன் வருந்தினான். அப்பொழுது இறைவன் தோன்றி ‘‘நாளை கார்த்திகை முதல் நாள், நீராடினால் ஐப்பசி மாதம் நீராடிய பலனை உனக்கு மட்டுமல்ல, உன்னை நினைத்து நீராடும் அனைவருக்கும் தந்தோம்’’ என்று வரம் அருளினார்.

ஒரு மாற்றுத்திறனாளியின் பக்திக்கு மனம் இரங்கி இறைவன் அருளிய வரம்தான் இந்த நீராட்டம். கார்த்திகை முதல் நாளாக இருப்பதால் ஐயப்பனுக்கு சபரிமலை விரதம் இருந்து செல்லும் பக்தர்கள் இன்று மாலை அணிவார்கள்.

தொகுப்பு: விஷ்ணுபிரியா

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Tags : Srithanvandri Jayanti ,Saturn ,Milky Way ,
× RELATED இந்த வார விசேஷங்கள்