×

கர்நாடக மாநில பாஜ தலைவராக விஜயேந்திரா நவ.15ல் பதவியேற்பு

*எதிர்க்கட்சி தலைவர் தேர்வு குறித்து17ம் தேதி எம்எல்ஏக்களுடன் ஆலோசனை

பெங்களூரு : கர்நாடக மாநில பாஜ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள விஜயேந்திரா, வரும் 15ம் தேதி மாநில தலைவராக பதவியேற்றுக்கொள்கிறார். அதன்பின்னர் 17ம் தேதியன்று, எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக எம்.எல்.ஏக்களை கூட்டி ஆலோசனை நடத்துகிறார். பாஜ மாநில தலைவராக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் எதிரொலியாக கட்சியின் மாநில தலைவர் பதவியிலிருந்து நளின் குமார் கட்டீல் விலகினார்.

அவர் விலகி 6 மாதங்களுக்கு பிறகு விஜயேந்திரா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 47 வயதே ஆன, முதல் முறை எம்.எல்.ஏ ஆகியுள்ள இளம் அரசியல்வாதியான விஜயேந்திராவின் தலைமையில் கட்சியை புத்துணர்ச்சியுடன் வளர்த்தெடுப்பதற்கான முனைப்பில் பாஜ மேலிடம் அவரை கட்சி தலைவராக நியமித்துள்ளது. விஜயேந்திரா வரும் 15ம் தேதி புதன்கிழமையன்று பாஜ மாநில தலைவராக பொறுப்பேற்கவுள்ளார்.

மாநில தலைவராக பொறுப்பேற்றதுமே, வரும் 17ம் தேதியன்று எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கூட்டவுள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியமைந்து 6 மாதங்கள் ஆகிவிட்டபோதிலும், பிரதான எதிர்க்கட்சியான பாஜ, இன்னும் எதிர்க்கட்சி தலைவரை நியமிக்கவில்லை என்று குற்றம்சாட்டி வருகிறது. எனவே எதிர்க்கட்சி தலைவர் தேர்வு குறித்து ஆலோசிப்பதற்காக வரும் 17ம் தேதியன்று எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கூட்டுகிறார்.

எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர் தேர்வு செய்யப்பட்டு, கட்சி மேலிடத்திடம் பரிந்துரைக்கப்படும். அதன்பின்னர் கட்சி மேலிடம் எதிர்க்கட்சி தலைவரை முடிவு செய்யும். பூத் அளவில் கட்சியை பலப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்போவதாக பாஜ புதிய மாநில தலைவர் விஜயேந்திரா கூறியுள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், ‘தேசியளவில் ஜெயிக்க வேண்டுமென்றால், முதலில் பூத் அளவில் வெற்றி பெற வேண்டும் என்று அமித்ஷா மற்றும் ஜே.பி.நட்டா எப்போதும் கூறுவார்கள்.

எனவே மாநிலத்தில் உள்ள 58,252 பூத்களிலும் கட்சியை பலப்படுத்துவதே எனது பிரதான நோக்கம். அதில் தான் முழுமையாக கவனம் செலுத்தவுள்ளேன். மக்களவை தேர்தலுக்கு தீவிரமாக தயாராகும் வகையில், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் நம்பிக்கையை அதிகரித்து அவர்களை உத்வேகப்படுத்த இருக்கிறேன்’ என்றார்.

விஜயேந்திராவை மாநில தலைவர் பதவியில் கட்சி மேலிடம் அமர்த்தியுள்ளதால் மகிழ்ச்சியில் இருக்கும் எடியூரப்பா, மக்களவை தேர்தலுக்காக விரைவில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறியுள்ளார். இதனால் பாஜவில் புது எழுச்சி ஏற்பட்டுள்ளது. பாஜ மூத்த தலைவர்கள் யாரும் விஜயேந்திராவை மாநில தலைவராக நியமித்துள்ளது குறித்து அதிருப்தி தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post கர்நாடக மாநில பாஜ தலைவராக விஜயேந்திரா நவ.15ல் பதவியேற்பு appeared first on Dinakaran.

Tags : Vijayendra ,Karnataka State BJP ,President ,Bengaluru ,
× RELATED தேவகவுடா பேரன் பிரஜ்வால் ஆபாச வீடியோ : 2023-ல் பாஜக நிர்வாகி கடிதம்