அண்ணாநகர்: தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்யாததால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட சிறுமி, குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். வானகரம், தனலட்சுமி நகரை சேர்ந்த ராதா – குமார் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) தம்பதிக்கு 13 வயதில் மகன், 9 வயதில் மகள் உள்ளனர். இவர்கள், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9 மற்றும் 4ம் வகுப்பு படித்து வருகின்றனர். காசநோயால் பாதிக்கப்பட்ட குமார், கடந்த 2013ம் ஆண்டு இறந்தார். இதனையடுத்து, ராதா தனது மகன், மகளுடன் தனியே வசித்து வந்தார். இந்நிலையில், மகன், மகள் படிக்கும் பள்ளியின் வேன் டிரைவர் கற்பக கனி (32) என்பவருடன் ராதாவுக்கு பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது.கடந்த 2019ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், ராதாவின் 9 வயது மகளுக்கு நீச்சல் கற்று தருவதாக கூறி, கற்பக கனி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி சிறுமி, கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி தனது தாயாரிடம் கூறினாள். அதிர்ச்சியடைந்த ராதா, இதுபற்றி திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இதை அறிந்த கற்பக கனி தலைமறைவானார். இதுவரை அவரை போலீசார் கைது செய்யவில்லை.இந்நிலையில், நேற்று முன்தினம் குழந்தைகள் பாதுகாப்பு உதவி மையத்தை (அவசர உதவி எண் 1098) தொடர்புகொண்ட சிறுமி, ‘‘தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது புகார் அளித்து 4 மாதமாகியும் இதுவரை போலீசார் அவரை கைது செய்யவில்லை என்றும், சம்மந்தப்பட்ட நபர் மீண்டும் இப்பகுதியில் சுற்றித் திரிவதால், தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது,’’ என தெரிவித்தாள். இதுறித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக குழந்தைகள் பாதுகாப்பு மையத்தினர் சிறுமிக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர்….
The post புகாரளித்து 4 மாதமாகியும் நடவடிக்கை இல்லை பாலியல் தொல்லை கொடுத்த டிரைவரால் உயிருக்கு ஆபத்து: சிறுமி பரபரப்பு புகார் appeared first on Dinakaran.
