×

சக்கைபோடு போட்ட ஆன்லைன் விற்பனை: ரூ.90,000 கோடிக்கு வர்த்தகம்?: கடந்த ஆண்டை விட 37 சதவீதம் உயர்வு

மும்பை: இந்த ஆண்டு பண்டிகை சீசனில் அமேசான் இணையதளத்தில் 4 நாட்களிலேயே ரூ.29,000 கோடிக்கு வர்த்தகம் நடந்துள்ளது. கடந்த ஆண்டை விட சுமார் 20 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆன்லைனில் பொருட்கள் விற்பனை ரூ.90,000 கோடியை எட்டியிருக்கும் என சந்தையாளர்கள் தெரிவிக்கின்றனர். பண்டிகை சீசனில் கடைகளுக்கு நேரில் சென்று ஷாப்பிங் செய்வது ஒரு தனி அனுபவம்தான். ஆனாலும், ஆன்லைன் ஷாப்பிங் வந்த பிறகு கடைக்கு சென்று பொருள் வாங்குவது குறைந்து விட்டது என்றுதான் கூற வேண்டும். காரணம், ஆன்லைன் ஷாப்பிங் தான். வீட்டில் இருந்தே ஆர்டர் செய்து வாங்கும் வசதி, எந்த மாநிலத்தில் இருந்தும் பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்பு, பண்டிகைக்கால அதிரடித் தள்ளுபடிகள் ஆகியவற்றால், ஆன்லைன் ஷாப்பிங் ஒவ்வொரு ஆண்டும் பண்டிகைதோறும் களைகட்டி வருகிறது.

இந்தஆண்டு தீபாவளி பண்டிகைக்கு அமேசான், பிளிப்கார்ட் உட்பட பல்வேறு இ-காமர்ஸ் எனப்படும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு தள்ளுபடிகளை அறிவித்தன. இவை வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்தன. இதனால் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை ஆன்லைன் விற்பனை 37 சதவீதம் உயர்ந்துள்ளதாக யூனிகாமர்ஸ் என்ற அமைப்பு தெரிவித்திருக்கிறது. இதில் பிராண்டுகளின் பிரத்யேக இணையதளங்களிலும் விற்பனை 23 சதவீதம் முதல் 29 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கணிசமாக உயர்ந்திருக்கிறது. இதுபோல் பேஷன் ஆடைகள் விற்பனையும், அழகு சாதன பொருட்கள் விற்பனையும் பிரதானமாக அடுத்தடுத்த இடங்களை பிடித்திருக்கின்றன.

இதுபோல், வீடுகளை அலங்கரிப்பதற்கான விளக்குகள், அலங்காரப் பொருட்கள் விற்பனையும் உயர்ந்திருக்கிறது. ஆன்லைன் பொருட்கள் வாங்குபோது, ஆர்டர் செய்யும்போதே பணம் செலுத்தும் பிரீபெய்டு ஆர்டர்கள் இந்த ஆண்டு 45 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.மற்றொரு புள்ளி விவரத்தின்படி, இந்த ஆண்டில் தீபாவளி பண்டிகை சீசனின் தொடங்கி முதல் 4 நாட்களில் மட்டும் ஆன்லைன் வர்த்தகம் ரூ.29,000 கோடிக்கு நடைபெற்றுள்ளது. முந்தைய ஆண்டை விட இந்த ஆண்டு 18 முதல் 20 சதவீதம் உயர்ந்தாலே ரூ.90,000 கோடியை எட்டும் என கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், இந்த ஆண்டு ரூ.90,000 கோடியை தாண்டி விற்பனை நடந்திருக்கும் என சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

* நாடு முழுவதும் ஒரே நாளில் ரூ.50,000 கோடிக்கு தீபாவளி வர்த்தகம்

வடமாநிலங்களில் தீபாவளி பண்டிகை 5 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில் முதலாவதாக தந்தேரஸ் பண்டிகை கொண்டாடுகின்றனர். அன்றைய தினம் தங்கம், வெள்ளி பொருட்கள் வாங்குவது சிறப்பானதாக கருதப்படுகிறது.. தங்கம், வெள்ளி தவிர, சமையலறை பொருட்கள், விளக்குகள், புத்தாடைகள், அலங்கார பொருட்கள், பூஜைப் பொருட்கள் என ஒரே நாளில் மொத்தம் ரூ. 50,000 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது என தெரிவித்துள்ளது. தந்தேரஸ் தினமான நேற்று முன்தினம் ஒரே நாளில் நாடு முழுவதும் ரூ.30,000 கோடிக்கு தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் விற்பனையாகியுள்ளன .இதில் தங்க நகைகள் விற்பனை சுமார் ரூ.27,000 கோடி, வெள்ளி நகை விற்பனை ரூ.3,000 கோடி என, அகில இந்திய நகைக்கடை மற்றும் நகை உற்பத்தியாளர் கூட்டமைப்பின் தேசிய தலைவர் பங்கஜ் அரோரா தெரிவித்துள்ளார்.

The post சக்கைபோடு போட்ட ஆன்லைன் விற்பனை: ரூ.90,000 கோடிக்கு வர்த்தகம்?: கடந்த ஆண்டை விட 37 சதவீதம் உயர்வு appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Amazon ,Dinakaran ,
× RELATED மும்பையில் கடல் சீற்றமாக இருக்கும்;...