×

இன்று தீபாவளி கோலாகல கொண்டாட்டம்; சென்னையில் இருந்து 12 லட்சம் பேர் பயணம்

* புத்தாடை வாங்க கடைவீதிகளில் மக்கள் வெள்ளம்
* பட்டாசு, ஸ்வீட் விற்பனை அமோகம்
* கோயில்களில் சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு

சென்னை: தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று காலை முதல் கடைகளில் துணிகள், பட்டாசுகள், ஸ்வீட் விற்பனை களை கட்டியது. இதனால் பஜார் வீதிகள் திக்குமுக்காடியது. பஸ், ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. சென்னையில் இருந்து மட்டும் பஸ், ரயில், கார், விமானம் மூலம் சுமார் 12 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.தீபாவளி பண்டிகை இன்று வழக்கமான உற்சாகத்துடன் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தீபாவளியை பொதுமக்கள் புத்தாடை உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும், நண்பர்கள்-விருந்தினர்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடுவது வழக்கம். இந்த நிலையில் தீபாவளி புத்தாடை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகம் முழுவதும் உள்ள கடைகளில் முழு வீச்சில் நடைபெற்று வந்தது. மேலும் பண்டிகைக்கால பல்வேறு சிறப்பு தள்ளுப்படிகளும் அறிவிக்கப்பட்டிருந்தது.

தீபாவளிக்கு முந்தைய நாளான நேற்று தமிழகம் முழுவதும் விற்பனை மேலும் அதிகரித்து காணப்பட்டது. சென்னையை பொறுத்தவரை தியாகராயநகர், புரசைவாக்கம், மயிலாப்பூர், வண்ணாரப்பேட்டை, பிராட்வே, தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதே நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பொருட்கள் இறுதிக்கட்ட பர்சேஸில் மக்கள் ஈடுபட்டனர். இதுமட்டுமின்றி, ஆந்திரா, பாண்டிச்சேரி, கர்நாடகா போன்ற பகுதிகளில் இருந்தும் மக்கள் அதிகமாக சென்னைக்கு ஜவுளிகளை வாங்க படையெடுத்து வந்த காட்சியை காண முடிந்தது. இதனால் நேரம் ஆக, ஆக கூட்டம் வழக்கத்தை விட இரட்டிப்பாக காணப்பட்டது.

மாலை நேரத்தில் இன்னும் கூட்டம் அதிகரித்தது. மாலை 4 மணிக்கு மேல் கடை வீதிகளில் எங்கு திரும்பினாலும் மக்கள் தலைகளாக காட்சியளித்தது. அந்த அளவுக்கு பஜார் வீதிகள் திக்குமுக்காடியது. இரவு 10 மணி வரை இந்த கூட்டம் காணப்பட்டது. ஒவ்வொருவரும் குடும்பத்துடன் இறுதிக்கட்ட தீபாவளி பர்சேஸில் மும்முரமாக ஈடுபட்டனர். ஒவ்வொரு துணிக்கடைகள் முன்பாக மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது. கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். திருட்டு உள்ளிட்ட குற்றங்களை தடுக்கும் வகையில் மாறுவேடத்திலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.சென்னையில் தீவுத்திடல், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ, மைதானம், நந்தம்பாக்கம், கொட்டிவாக்கம், பாரிமுனை, கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த கடைகளில் நேற்று காலை முதலே கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கடந்த ஆண்டை விட பட்டாசுகள் 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை விலை அதிகரித்து காணப்பட்டது. பட்டாசு பொருட்களுக்கான மூலப்பொருட்கள் விலை ஏற்றம், ேபக்கிங் செய்வதற்கான பொருட்கள் விலை ஏற்றம் போன்ற காரணங்களால் இந்த விலை உயர்வு ஏற்பட்டிருந்தது. இருந்த போதிலும் விலையை பொருட்படுத்தாமல் மக்கள் பட்டாசுகளை வாங்கி சென்றனர். இரவில் கூட்டம் மேலும் அதிகரித்தது. அதே போல சுவிட் கடைகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஆர்டர் கொடுத்தவர்கள் உடனடியாக ஆர்டர் செய்த ெபாருளை வாங்கி சென்றனர். ஆர்டர் செய்யாதவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவீட்டை வாங்கி சென்றனர். சென்னை மாநகரில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மற்றும் கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என லட்சக்கணக்கானோர் வசித்து வருகின்றனர்.

இவர்கள் பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் மற்றும் கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட விஷேச தினங்களில், தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று தீபாவளி கொண்டாடப்படுவதால், அவர்கள் கடந்த வியாழக்கிழமை முதலே ரயில்கள், பஸ்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். இதனால் சென்னை எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இருந்து புறப்பட்ட அனைத்து ரயில்களிலும் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. முன்பதிவு செய்யப்பட்டாத பெட்டிகளில் நிற்பதற்கு கூட இடம் இல்லாத அளவுக்கு மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இறுதி நாளான நேற்றும் மக்கள் வெள்ளம் ரயில்களில் காணப்பட்டது. இதேபோல் தமிழக அரசின் பஸ்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஊருக்கு செல்வதற்கு வசதியாக வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன், சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. மேலும் தனியார் சார்பில் அதிக அளவில் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டது. இதனால், ரயில் நிலையம், பஸ்நிலையங்களில் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. கூட்டத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

சென்னையில் இருந்து ரயில், பஸ், கார்கள் மற்றும் விமானம் மூலம் கடந்த 3 நாட்களில் சுமார் 12 லட்சம் பேர் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் சென்னையில் உள்ள சாலைகள் அனைத்தும் நேற்று காலை முதல் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால், எந்தவித இடைஞ்சலும் இன்றி சாலைகளில் பயணம் செய்ய முடிந்தது. தீபாவளிக்கு மறுநாளான திங்கட்கிழமை அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், சொந்த ஊர் புறப்பட்டு சென்றவர்கள் உடனடியாக திரும்பிவர வாய்ப்பில்லை.

இதனால், திங்கட்கிழமை வரை கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு இல்லை. செவ்வாய் கிழமைக்கு மேல் சென்னைக்கு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.தீபாவளி பண்டிகையன்று குடும்பத்தோடு கோயில்களுக்கும் சென்று பொதுமக்கள் வழிபாடு நடத்துவது வழக்கம். இதனால் இன்று பெரும்பாலான கோயில்களில் சிறப்பு பூஜைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர் விடுமுறையை பயன்படுத்தி சுற்றுலாத் தலங்களுக்கும் ஏராளமான பொதுமக்கள் செல்வார்கள் என்பதால் அங்கும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மதுக்கடைகளில் கூட்டம்:

விஷேச நாட்களில் நிறைய பேர் நண்பர்களுக்கு மது விருந்து அளிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. முந்தியடித்து கொண்டு சரக்குகளை வாங்கிய காட்சிகளை காண முடிந்தது.

3 அடுக்கு பாதுகாப்பு:

சென்னையில் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே, சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், இணை கமிஷனர்கள் பிரேம் ஆனந்த் சின்கா, அஸ்ரா கார்க், சுதாகர் ஆகியோரது தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 10 நாட்களாக அவர்கள் இரவு, பகல் பார்க்காமல் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தியும், கூட்டத்தை கட்டுப்படுத்தியும் வருகின்றனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துதல், குற்ற தடுப்பு முறைகள், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் வாகனங்களை ஒழுங்குப்படுத்துதல் போன்ற 3 அடுக்கு பாதுகாப்பினை போலீசார் வழங்கினர். அதன்படி, பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் சட்டம்- ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை மற்றும் ஊர்காவல் படை வீரர்கள் என 18 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் முக்கிய வணிக தளங்களில் சிறப்பு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதுமட்டுமின்றி, கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணித்தல், சிசிடிவி கேமரா பதிவுகளை கண்காணித்தல், அகன்ற திரையின் மூலம் பாதுகாப்பு வாசகங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை வாசகங்கள் பொதுமக்களு ஒலிபரப்பு செய்தல், ரோந்து வாகனங்கள் மூலம் அடிக்கடி கண்காணித்தல், போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் சிறப்பு ஏற்பாடு, 108 ஆம்புலன்ஸ் வசதிகள், தீயணைப்பு வாகனங்களை தயார் நிலையில் இருத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

The post இன்று தீபாவளி கோலாகல கொண்டாட்டம்; சென்னையில் இருந்து 12 லட்சம் பேர் பயணம் appeared first on Dinakaran.

Tags : Diwali Kolagala ,Chennai ,Diwali Kolagala Celebration ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...