×

தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானாவில் பல கோடி வசூல் தீபாவளி பரிசு பொருள் வழங்காததால் தனியார் சிட்பண்ட் நிறுவனம் சூறை: ஓட்டல், மளிகை சாமான்களையும் அள்ளிச்சென்றனர், செய்யாறில் மக்கள் மறியல் – போக்குவரத்து பாதிப்பு

செய்யாறு: தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானாவில் பல கோடி ரூபாய் வசூலித்த சிட்பண்ட் நிறுவனம் தீபாவளி பரிசு பொருட்கள் வழங்காததால், செய்யாறில் உள்ள தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் தனியார் சிட்பண்ட் உள்ளது. இங்கு கடந்த 5 ஆண்டுகளாக தீபாவளி, பொங்கல், தமிழ் புத்தாண்டு, மே 1 (தொழிலாளர் தினம்) முன்னிட்டு ரூ.100 முதல் ரூ.5,000 வரையிலான சீட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பட்டாசு, இனிப்பு, மளிகை பொருட்கள், பாத்திரங்கள், வீட்டு உபயோக பொருட்கள், வெள்ளிப்பொருட்கள் மற்றும் தங்க நாணயங்கள் என கட்டிய பணத்துக்கு 4 மடங்காக வழங்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் தமிழகம் முழுவதும் 20 கிளை நிறுவனங்களில் திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் ஆரம்பிக்கப்பட்ட கிளை நிறுவனங்களில் சில மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என சுமார் 5 லட்சம் பேர் மாதச்சீட்டு செலுத்தி வந்துள்ளனர். இதன் மூலம் பல கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது தீபாவளிக்குக்கு பட்டாசு மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று காலை 7 மணி அளவில் செய்யாறில் சிட்பண்ட் நிறுவன தலைமை அலுவலகம் முன்பு சுமார் 300 பேர் திடீரென திரண்டனர். அவர்களை பார்த்தவுடன் இரவு காவலர்கள் பயந்து ஓடிவிட்டனர். இதையடுத்து உள்ளே புகுந்தவர்கள் அலுவலகத்தில் இருந்த சோபா, ஏசி, பீரோ, மின்விசிறி, நாற்காலிகள், டிவி, இன்வெர்ட்டர் பேட்டரிகள், பைக்குகள் என அனைத்தையும் அள்ளிச்சென்றனர். மேலும் பொருட்களை சிலர் உடைத்து சூறையாடியதாக கூறப்படுகிறது. இதேபோல் அருகே உள்ள அந்த நிறுவன மளிகை கடைக்கு வெளியே இருந்த பொருட்களை அள்ளிச்சென்றுள்ளனர்.

மேலும், நிறுவனத்திற்கு சொந்தமான பைபாஸ் சாலையில் உள்ள ஓட்டலில் சமையல் பொருட்கள், பாத்திரங்கள், நாற்காலிகள், 20 காஸ் சிலிண்டர்களை தூக்கி சென்றனர். குடோனில் இருந்தும் பொருட்களை மூட்டை கட்டி தூக்கி சென்றனர். தகவலறிந்து போலீசார் வந்ததும், கும்பல் தப்பியது. தனியார் நிறுவன உரிமையாளர் அல்தாப் வீட்டை முற்றுகையிட்டு, மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் சமாதானம் செய்து அனுப்பினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானாவில் பல கோடி வசூல் தீபாவளி பரிசு பொருள் வழங்காததால் தனியார் சிட்பண்ட் நிறுவனம் சூறை: ஓட்டல், மளிகை சாமான்களையும் அள்ளிச்சென்றனர், செய்யாறில் மக்கள் மறியல் – போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu, ,Andhra Pradesh, Telangana ,Diwali ,Sidfund ,Seyyar ,Tamil Nadu, Andhra, Telangana ,Chitfund ,
× RELATED கழுகுகள் மரணத்துக்கு காரணமாக உள்ள...