×

தி.நகரில் ரூ.20 கோடி பங்களா வீடு அபகரிப்பு வழக்கு சினிமா பைனான்சியர் மகன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது: போலீஸ் கமிஷனர் ரத்தோர் நடவடிக்கை

சென்னை: தி.நகரில் ரூ.20 கோடி மதிப்புள்ள பங்களா வீட்டை அபகரித்த வழக்கில் பிரபல சினிமா பைனான்சியர் மகன் ககன்சந்த் போத்ராவை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். சென்னையை சேர்ந்த பாலாமணியன் என்பவருக்கு தி.நகர் விஜயராகவா சாலையில் ரூ.20 கோடி மதிப்புள்ள பங்களா வீடு உள்ளது. இந்த வீட்டிற்கு பிரபல சினிமா பைனான்சியரும் வைர வியாபாரியுமான முகன்சந்த் போத்ரா கடந்த 2013ம் ஆண்டு ரூ.1.80 லட்சம் மாத வாடகைக்கு பேசி தனது குடும்பத்துடன் குடியிருந்து வந்தார்.

கொரோனா காலத்தில் முகன்சந்த் போத்ரா உயிரிழந்தார். அதன் பிறகு பைனான்ஸ் மற்றும் வைர வியாபாரம் அனைத்தையும் அவரது மூத்த மகன் ககன்சந்த் போத்ரா (35) கவனித்து வருகிறார். தனது தந்தை இறந்த பிறகு வீட்டிற்கான வாடகை பணத்தை ககன்சந்த் போத்ரா கொடுக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் பாலாமணியன் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையில் இருக்கும் நிலையில், ககன்சந்த் போத்ரா வீட்டிற்கு ரூ.6 கோடி கொடுத்தது போன்று போலியான குத்தகை ஒப்பந்தம் பத்திரம் தயார் செய்து கொடுத்துள்ளார்.

இதுகுறித்து வீட்டின் உரிமையாளரான பாலாமணியன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்திய போது, ரூ.20 கோடி மதிப்புள்ள பங்களா வீட்டை அபகரிக்கும் நோக்கில் போலி ஆவண பத்திரம் தயாரித்து ககன்சந்த் போத்ரா மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் சினிமா பைனான்சியரான ககன்சந்த் போத்ராவை கடந்த மாதம் 28ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ககன்சந்த் போத்ரா மீது இதுபோல் 7க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது. எனவே போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி ககன்சந்த் போத்ராவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 2017ம் ஆண்டு மோசடி வழக்கு ஒன்றில் ககன்சந்த் போத்ராவை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

The post தி.நகரில் ரூ.20 கோடி பங்களா வீடு அபகரிப்பு வழக்கு சினிமா பைனான்சியர் மகன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது: போலீஸ் கமிஷனர் ரத்தோர் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : D. Nagar ,Chennai ,Gaganchand Bodra ,
× RELATED வீட்டின் பூட்டை உடைத்து ரூ1 லட்சம், 15 கிலோ வெண்கலம் திருட்டு