×

டெல்லியில் இருநாட்டு அமைச்சர்கள் சந்திப்பு; பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இந்தியா- அமெரிக்கா பேச்சு

புதுடெல்லி: டெல்லியில் நடந்த டூ பிளஸ் டூ அமைச்சர்கள் கூட்டத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பு, இஸ்ரேல்-ஹமாஸ் போர் ஆகியவை பேச்சுவார்த்தையில் இடம் பெற்றது என்று ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். இந்தியா-அமெரிக்கா நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு துறைகளின் ஒத்துழைப்பு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் மக்களிடையேயான உறவுகளின் மேம்பாட்டிற்கு உதவ இரு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் நிதியமைச்சர்கள் பங்கேற்கும் 2 பிளஸ் 2 பேச்சுவார்த்தை ஆண்டுதோறும் நடக்கிறது. 5வது இந்தியா- அமெரிக்கா 2 பிளஸ் 2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை டெல்லியில் நேற்று நடந்தது. இதில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றனர்.

இதில் தொடக்க உரையாற்றிய, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ‘‘கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி மேற்கொண்ட அமெரிக்க சுற்றுபயணம் இரு நாடுகளின் உறவில் புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது. மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோரின் எண்ணங்களின்படி ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, பகிரப்பட்ட சர்வதேச விஷயங்கள் குறித்து இதில் விவாதிக்கப்படும். ’’ என்றார். பிளிங்கன் பேசுகையில்,‘ குவாட் மூலம் இருநாடுகளுக்கு இடையே நட்புறவை வலுப்படுத்தி சுதந்திரமான, வெளிப்படையான, வளமான, பாதுகாப்பான, நெகிழ்ச்சியான இந்தோ பசிபிக் பகுதியில் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவது முக்கிய நோக்கம்’’ என்றார்.

பாதுகாப்பு கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், ‘‘பேச்சுவார்த்தை சிறப்பாக அமைந்தது. இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு, விண்வெளி மற்றும் தொழில்நுட்பம் குறித்து பேசப்பட்டது. மேலும், இந்தோ-பசிபிக்கில் அதிகரித்து வரும் சீன ராணுவ நடவடிக்கைகள், தெற்கு ஆசியா நிலைமை, இஸ்ரேல்-ஹமாஸ், உக்ரைன் போர் ஆகியவை பற்றி கருத்துகளை பரிமாறி கொண்டோம்’’ என்றார்.

ஒன்றிய வெளியுறவு செயலாளர் வினய் கவாத்ரா பேட்டிளிக்கையில்,‘‘டூ பிளஸ் டூ பேச்சுவார்த்தையில் கனடாவில் காலிஸ்தான் ஆதரவு சீக்கிய அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கவலை தெரிவித்தார். சீக்கிய தீவிரவாதி குர்பத்வந்த் சிங் ஏர் இந்தியா விமானத்தை குண்டுவைத்து தகர்க்க போவதாக மிரட்டல் விடுத்து வெளியிட்ட வீடியோ குறித்தும் அமெரிக்க அமைச்சர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது’’ என்றார்.

The post டெல்லியில் இருநாட்டு அமைச்சர்கள் சந்திப்பு; பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இந்தியா- அமெரிக்கா பேச்சு appeared first on Dinakaran.

Tags : Delhi ,India ,US ,New Delhi ,Israel ,Hamas ,Dinakaran ,
× RELATED பிரைவசி வசதியை நீக்க வலியுறுத்தினால்...