×
Saravana Stores

நெருப்போடு விளையாட வேண்டாம்: பஞ்சாப் ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

புதுடெல்லி: மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத விவகாரத்தில், நீங்கள் நெருப்போடு விளையாட வேண்டாம் என்று பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காத விவகாரத்தில் தமிழ்நாட்டை போலவே பஞ்சாப் மாநில அரசு, அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராக தொடர்ந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது பஞ்சாப் அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ‘‘பஞ்சாப் மாநில ஆளுநர் மொத்தமாக ஏழு மசோதாக்களை நிலுவையில் வைத்துள்ளார். இவை அனைத்தும் வெவ்வேறு துறை சார்ந்தது’’ என தெரிவித்தார்.

அப்போது பஞ்சாப் ஆளுநர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ‘‘பஞ்சாப் மாநிலத்தை பொறுத்தமட்டில் சட்டப்பேரவையில் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகத்தான் நான்கு மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் ஆளுநர் இருக்கிறார்’’ என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், ‘‘ஜனநாயகம் செயல்பட வேண்டும் என்றால் ஆளுநரும் மாநில முதல்வரும் இணைந்து செயல்பட வேண்டும். அதே நேரத்தில் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதற்கு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவடைந்ததை சுட்டிக்காட்டினால் அதனை கண்டிப்பாக ஏற்க முடியாது’’ என தெரிவித்தார். அதற்கு பதிலளித்த ஆளுநர் தரப்பு வழக்கறிஞர், ‘‘ஆளுநரை எதிர்க்கும் விதமாக மாநில முதல்வர் சட்டபேரவை உரையின் போது பேசியுள்ளார்’’ என தெரிவித்தார்.

அப்போது மீண்டும் குறுக்கிட்ட தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ‘‘இந்த விவகாரத்தில் ஆளுநரை மாநில முதல்வர் மரியாதையாக பேசினாரா?, இல்லையா? என்பது இங்கு கேள்வியே கிடையாது. அது தனிப்பட்ட விஷயமாகும். இதில் சட்டமன்ற கூட்டத்தொடரை மாநில அரசு கூட்டுவது மற்றும் அரசின் மசோதாக்கள் மீது ஆளுநர் ஒப்புதல் அளித்து செயல்படுத்துவது ஆகிய இரண்டும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். ஆனால் இந்த விவகாரத்தில் பஞ்சாப் அரசாங்கத்தின் செயல்பாடுகளும், ஆளுநரின் செயல்பாடுகளும் மிகவும் கவலை அளிக்கிறது. குறிப்பாக இரு தரப்பும் அரசியல் சாசனத்தை சீர்குலைக்கும் செயல்பாடுகளில் ஈடுப்பட்டுள்ளீர்கள்’’ என கோபமாக தெரிவித்தார்.
ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த பஞ்சாப் மாநில அரசு தரப்பு வழக்கறிஞர் சிங்வி, ‘‘கூட்டத் தொடரை நடத்துவது என்பது மாநில அரசுடைய அதிகாரம். அதை சபாநாயகர் கொண்டு நாங்கள் முறையாக மேற்கொண்டு வருகிறோம். ஆனால் இங்கு பிரச்னையே ஆளுநர் மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் இருப்பது தான்’’ என கூறினார்.

இதையடுத்து பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கடுமையான அதிருப்தி தெரிவித்தார்.அப்போது,‘‘நீங்கள் நெருப்புடன் விளையாடுகிறீர்கள். அது வேண்டாம் என்று நாங்கள் நினைக்கிறோம். இந்த விவகாரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உச்ச நீதிமன்றம் பார்க்கிறது. மாநில அரசால் சட்டப்பேரவையில் அனுப்பப்பட்ட மசோதாக்களை ஆளுநர் எவ்வாறு கிடப்பில் போட முடியும்? அதே போன்று தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடுகளை எவ்வாறு முடக்க முடியும்? ஆளுநருக்கு இது போன்ற அதிகாரங்களை யார் கொடுத்தது? இது வேதனையான ஒன்றாகும். உங்களது செயல்பாடுகளின் தீவிரத்தை ஆளுநராக புரிந்து கொள்ள முடிகிறதா, இல்லையா என்பது எங்களுக்கு புரியவில்லை.

இருப்பினும், ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கிடையாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் தங்களை கொஞ்சம் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ’’ என காட்டமாக தெரிவித்தார்.அப்போது இந்த விவகாரத்தில் விரிவான விளக்கம் அளிக்க ஒரு வாரம் அவகாசம் வேண்டும் என்று ஆளுநர் தரப்பில் நீதிபதிகள் முன்னிலையில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை தீபாவளி விடுமுறைக்கு பின்னர் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

The post நெருப்போடு விளையாட வேண்டாம்: பஞ்சாப் ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Punjab ,governor ,New Delhi ,Punjab Governor ,Panwarilal Purohit ,Dinakaran ,
× RELATED ஆதார் அட்டையை வயதுக்கான சான்றாக பயன்படுத்த முடியாது: உச்ச நீதிமன்றம்