×

கிருத்தி ஷெட்டி ஃபிட்னெஸ்

நன்றி குங்குமம் டாக்டர்

விஜய்சேதுபதி நடித்த உப்பென்னா என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் கீர்த்தி ஷெட்டி. பின்னர், அதே ஆண்டு தெலுங்கில் வெளியான ஷியாம் சிங்கா ராய் என்ற படமும் ரசிகர்களின் வரவேற்பை அவருக்கு பெற்றுத் தந்தது. அதன்பின்னர், லிங்குசாமியின் தி வாரியார் படம் தமிழில் இவருக்கு அறிமுகம் தந்தது. 20 வயதே ஆன இளம் நடிகையாக மிளிரும் கீர்த்தி, திரைக்கு வருவதற்கு முன்பு மாடலாக ஜொலித்தவர். மேலும், சின்னத்திரை மற்றும் விளம்பரப் படங்கள் பலவற்றில் நடித்துள்ளார். இன்ஸ்டாவில் சுமார் நான்கு மில்லியன் ரசிகர்களைக் கொண்டுள்ளார். தற்போது பாலா இயக்கத்தில் உருவாகி வரும் வணங்கான் படத்தில் நடித்துவரும் கீர்த்தி, தனது ஃபிட்னெஸ் குறித்து பகிர்ந்து கொண்டவை:

ஒர்க்கவுட்ஸ்: ஒர்க்கவுட்டில் நான் ரொம்ப கண்டிப்பாக இருக்கிறேன். ஏனென்றால், ரொம்ப சின்ன வயதிலேயே எனது கனவுகள் கைகூடி வந்துவிட்டது. அதை தக்க வைத்துக் கொள்ளவும், அடுத்தடுத்த கட்டத்திற்கு போகவும் ஒர்க்கவுட் மிக மிக முக்கியமானது. எனவே, தினசரி காலை மாலை இருவேளையும் நிச்சயம் ஒர்க்கவுட்ஸ் இருக்கும். காலையில் தினசரி சூர்ய நமஸ்காரம் 5 முறையாவது செய்வேன்.

அடுத்து நடைப்பயிற்சியில் தொடங்கி உடற்பயிற்சிகள் எல்லாம் முடித்துவிட்டு, யோகாவில் அமர்ந்துவிடுவேன். யோகா செய்யாமல் உடற்பயிற்சி அறையை விட்டு வெளியே வரவே மாட்டேன். ஏனென்றால், கடினமான உடற்பயிற்சிகள் செய்யும்போது, உடல் பிசிக்கலாக ஸ்ட்ரெஸ் ஆகியிருக்கும். அதனை சாந்தி படுத்தவும், அமைதிபடுத்தவும் உடற்பயிற்சிகள் முடிந்தவுடன் யோகா செய்வது நல்ல பலனைத் தருகிறது.

அதுபோல உடற்பயிற்சியிலும் தினசரி ஒரேவிதமான பயிற்சிகள் செய்யாமல் ஒருநாள் டிரெட்மில்லில் பயிற்சி செய்தால், அடுத்தநாள் சைக்கிளிங் செய்வேன். அதற்கடுத்த நாள் ஸ்கிப்பிங் கயிறை ஜன்னலில் கட்டி அதை இழுத்து இழுத்து செய்யும் பயிற்சிகள் செய்வேன். அது எனது தசைகளுக்கு பலமளிக்கிறது. மாலை நேரங்களில் எனது ஜிம் நண்பர்களுடன் ஒரு டீமாக சேர்ந்து வாலிபால் விளையாடுவது, பாஸ்கெட் பால் விளையாடுவது போன்றவற்றை மேற்கொள்ளுவேன். இப்படி செய்வதனால் கூடுதலான கலோரிகளை எரிக்க உதவுகிறது. அதுபோல, இரவில் தூங்க செல்வதற்கு முன்பு டிரெட்மில்லில் 30நிமிடம் மெதுவான நடையும் மற்றும் 30நிமிடம் வேகநடையும் நிச்சயம் இருக்கும். இவைகள்தான் எனது தினசரி
ஒர்க்கவுட் ரொட்டீன்.

டயட்: டயட் என்று பெரிதாக நான் எதையும் ஃபாலோ செய்வது இல்லை. பிடித்ததை சாப்பிடுவேன். அப்படி அதிகம் சாப்பிட்டுவிட்டால், இருக்கவே இருக்கு ஒர்க்கவுட்ஸ். கொஞ்சம் கூடுதலாக ஒர்க்கவுட் செய்துவிடுவேன். அதேசமயம், கண்டதையும் சாப்பிடும் பழக்கம் எனக்கு இல்லை. முடிந்தளவு ஹெல்த்தியான உணவுகளையே சாப்பிடுவேன். காலையில் முட்டையின் வெள்ளை கரு சேர்த்த தோசை எடுத்துக் கொள்வேன். அதுபோல, மதிய உணவில் தயிர் சாதமும் சிக்கனும் எடுத்துக் கொள்வேன். இரவில் சூப், சாலட் போன்றவற்றோடு பெரும்பாலும் முடித்துக் கொள்வேன்.

பியூட்டி: காலையில் எப்போதும் குளிக்க செல்லும் முன் கடலைமாவு, பச்சைப்பயறு மாவு, மஞ்சள், பால், எலுமிச்சைச்சாறு கலந்த கலவையை பூசி வைத்திருந்துவிட்டு பத்து நிமிடம் கழித்து குளிக்கச் செல்வேன். இது எனது பாட்டி சொன்ன அழகுக் குறிப்பு. இதுவரை நான் பார்த்ததில் வேறு எந்த பியூட்டி புரொடக்ட்டுமே அதற்கு இணையாகவில்லை. அதுபோல் குளித்துவிட்டு வந்ததும் மாய்சுரைஸ் தடவிக் கொள்வேன். அது அந்த நாள் முழுவதும் எனது சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறது.

அதுபோல் சன் ஸ்க்ரீன் பயன்படுத்தவும் தவறமாட்டேன். அது சருமத்தை சன் டேமேஜில் இருந்து பாதுகாக்கும். மற்றபடி பாடிலோஷன், கண்டிஷனர் போன்றவற்றை பயன்படுத்துவதில்லை. முடிந்தளவு ரசாயன கலப்பு அதிகம் இல்லாத ஆர்கானிக் பிராண்ட்களையே பயன்படுத்துகிறேன். அதுபோல, நான் சென்னை வந்தாலும் சரி அல்லது ஹைதராபாத் சென்றாலும் சரி அல்லது மும்பையில் இருந்தாலும் சரி எந்த ஊரில் இருக்கிறேனோ அந்தந்த ஊருக்கு தகுந்தவாறு எனது மேக்கப் அயிட்டங்கள் மற்றும் பிராண்ட்களை மாற்றிக் கொள்வேன்.

காரணம், ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு சீதோஷண நிலை இருக்கும். எனவே, அந்த க்ளைமெட்டுக்கு தகுந்தவாறு மாற்றிக் கொள்வேன். இது தவிர, சரும பராமரிப்புக்கு தேங்காய் எண்ணெய் மட்டுமே அதிகம் பயன்படுத்துவேன். அதுபோல தலைக்கும் ஹேர்மாஸ்க் எல்லாம் பயன்படுத்த மாட்டேன். தேங்காய் எண்ணெய் மட்டுமே பயன்படுத்துவேன். அதுபோல பிட்னெஸ் என்றால் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது தூக்கம். தூக்கம் சரியாக இருந்தால் உடல் ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்கும். எனவே, முடிந்தளவு தூக்கத்தில் எப்போதும் காம்ப்ரமைஸ் ஆக மாட்டேன்.

தொகுப்பு: ஸ்ரீ தேவி குமரேசன்

The post கிருத்தி ஷெட்டி ஃபிட்னெஸ் appeared first on Dinakaran.

Tags : Kriti Shetty Fitness ,Keerthy Shetty ,Dr. ,Vijay Sethupathi ,
× RELATED போட்டோ ஏஜிங்… இது வெயிலால் வரும் முதுமை!